கரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகத்தில் 90 சத பணிகள் நிறைவு: அமைச்சர் விஜயபாஸ்கர்!

சற்றுமுன் திருச்சி லைஃப் ஸ்டைல்

vijayabhaskar minister - 2026

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் கரூர் மாவட்ட குடிநீர் விநியோகம் தொடர்பான அதிகாரிகள் மட்டத்தில் கலந்துகொண்ட கூட்டத்தில் பங்கேற்றார் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியவை…

கரூர் மாவட்டத்தில் கரூர் நகராட்சி மற்றும் குளித்தலை நகராட்சி உள்ளது. மேலும் 11 பேரூராட்சிகள் எட்டு ஊராட்சி ஒன்றியங்களிலும் 14 கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் அமைத்து குடிநீர் வினியோகம் சீராக நடைபெற்று வருகிறது.

கரூர் நகராட்சி பகுதிகளில் சுமார் 62 ஆயிரத்து 500 குடிநீர் இணைப்புகள் வழங்கி தினந்தோறும் குடிநீர் வழங்க பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காவிரி ஆற்றிலிருந்து குடி நீரை சேமித்து வைக்கும் நீர்த்தேக்க தொட்டி வரை குடிநீர் குழாய்கள் பதிக்க கூடுதல் நிதியாக ரூபாய் 15 கோடி தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.

இதேபோல் தாந்தோன்றிமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 274 குக்கிராமங்களில் குடிநீர் திட்ட பணிகளை நிறைவேற்ற 80.40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது.

குளித்தலை மற்றும் தாந்தோன்றிமலை ஆகிய பகுதிகளில் 80 சதவீதமான குடிநீர் திட்ட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.இதேபோல் அரவக்குறிச்சி பரமத்தி ஒன்றியங்களில் ரூபாய் 250 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் அமைக்க தமிழக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அனுமதி வழங்கியுள்ளனர். கிராம பகுதிகளில் 1500 அடிக்கு கீழே நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு ரூபாய் 65.75 லட்சம் மதிப்பீட்டில் டேங்கர் லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் செய்வதற்கான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள 10 சதவீத பணிகள் இன்னும் ஓர் ஆண்டுக்குள் நிறைவடையும். ஆயினும் தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் எல்லா பகுதிகளுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது… என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.