அத்திவரதர் வைபவம் ஆக.17 ஆம் தேதியுடன் நிறைவு: ஆட்சியர் உறுதி!

Published:

athivarathr1 horz - 2026

அத்திவரதர் மீண்டும் வரும் 17ஆம் தேதி அனந்தசரஸ் குளத்திற்குள் கொண்டு செல்லப்படுவதில் மாற்றமில்லை; ஆகமவிதிப்படி ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை அல்லது இரவு குளத்திற்குள் அத்திவரதர் கொண்டு செல்லப்படுவார் என்றார் மாவட்ட ஆட்சியர்.

விஷ்ணு காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் ஆலயத்தில் நடைபெற்று வரும் அத்திவரதர் வைபவம் திட்டமிட்ட படி ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அத்திவரதர் பெருமான் அன்று அனந்தசரஸ் குளத்திற்குள் மீண்டும் எழுந்தருளச் செய்யப் படுகிறார். இதனை ஆட்சியர் பொன்னையா உறுதி செய்தார். அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்படும் என சமூக வலைதளங்களில் உலவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

காஞ்சிபுரத்தில் இன்று 43வது நாளாக அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது. இன்னும் மூன்று தினங்களே அத்திவரதர் வைபவம் நடைபெறவுள்ளதால், அதற்குள் அத்திவரதரை தரிசித்துவிட ஏராளமான பக்தர்கள் காஞ்சியில் கூடியுள்ளனர்.

இதனிடையே அத்திவரதர் வைபவம் குறித்து விளக்குவதற்காக செய்தியாளர்களை சந்தித்தார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா. அப்போது அவர், “பெருகி வரும் பக்தர்கள் கூட்டத்தை கணக்கில் கொண்டு, நகரைச் சுற்றி 3 இடங்களில் அனைத்து விதமான வசதிகளுடன் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.. தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்கு அருகே இந்த தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட அளவு பக்தர்கள் தரிசனம் முடித்ததும் இங்கு தங்கியுள்ளவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப் படுவார்கள். வந்தவாசி திருவண்ணாமலையில் இருந்து வரும் பக்தர்கள் டி.ஏ.வி பள்ளி அருகே தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ALSO READ:  ஒரு கைத்தறி தயாரிப்பையாவது வாங்கி, அதுகுறித்த வீடியோவை பகிருங்கள்!

அத்திவரதரை தரிசனம் செய்வதற்கான நாட்கள் நீட்டிக்கப்படவுள்ளன என்று சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்திகள் வதந்தி. திட்டமிட்டபடி ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்திவரதர் மீண்டும் அனந்தசரஸ் குளத்துக்குள் வைக்கப்படுவார்! சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்ப வேண்டாம்” என்றார்.

kanchipuram inspector collector - 2026இதனிடையே காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையாவை கண்டித்து ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் அத்திவரதர் பாதுகாப்பு பனியின் போது காவல் ஆய்வாளர் ரமேஷை ஆட்சியர் ஒருமையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ரமேஷை தரக்குறைவாகவும், அநாகரிகமாகவும் ஆட்சியர் நடத்தியதாக ஓய்வு பெற்ற காவல்துறை நலச்சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

மேலும், சரிவர ஏற்பாடுகள் செய்து தராமல் காவல் துறை அதிகாரியை மட்டும் குற்றம் சாட்டும் ஆட்சியர், தன் பொறுப்பில் இருந்து கடமை தவறிவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன.

Related articles

Recent articles

spot_img