அவைகளுக்கான ‘ஆமென்’..!

இலக்கியம் கவிதைகள்
goat temple - 2026

விலங்குகள் கூடின.
தங்களுக்கான
கடவுளைத் தேடின.

கடவுளைத் தேடும் பணி
ஆந்தையிடம்.
இருட்டிலும் தேடுமென்பதால்.

கடவுளுக்கான கதையெழுத
யானையை அமர்த்தினார்கள்
எல்லாமே மனிதர்களைப் பார்த்துதான்.

கோயிலுக்கான இடம் தேட
நாய்கள் ஓடின.
இன்னும் ஓடிக்கொண்டேயிருக்கின்றன.

பூ மாலை தொடுக்கும் பணி
தங்களுக்கேயென்று
குரங்குகள் அடம் பிடித்தன.

பிரார்த்தனைப் பாடல்களுக்கான
பயிற்சியை ….வேறு யார் ?
கழுதைகள் தாம்.

பூனைகளோ
பூசிக்கும் உரிமை
தங்களுக்கேயென்று
நகம் நீட்டுகின்றன.

நரிகள் வழக்கம் போல்
இனியொரு கடவுளை
போட்டிக்குத் தயார்படுத்துகின்றன.

நான் கடவுளில்லையா
என்றவாறு கர்ஜிக்கிறது சிங்கம் .

இப்படியானதொரு நிலையில்
ஆடொன்று தன் கூட்டத்தாரிடம் கூறியது

கடவுள் வரட்டும்
கோவில் வரட்டும்
திருவிழா வரட்டும்
ஒரு மனிதனைப் பிடித்து
ஒரே வெட்டு ….வெட்டணும்ம்ம்மே …

மற்ற ஆடுகளும் அவ்வாறே
..ம்ம்ம்ம் மே யென்றதுகள்.
அவைகளுக்கு அதுதான்
ஆமென் .

  • பக்தவத்சலம் ஸ்ரீனிவாசன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.