நேதாஜி குறித்த ரகசிய ஆவணங்கள்: பிரதமர் மோடி வெளியிட்டார்

சற்றுமுன்

புது தில்லி:

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்ம மறைவு தொடர்பாக மத்திய அரசின் காப்பகத்தில் இருந்த நூறு ரகசிய கோப்புகளை நேதாஜியின் பிறந்தநாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்திலும் செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, நாட்டின் விடுதலைக்காக இந்திய தேசியப் படை என்ற மாபெரும் விடுதலைப் போர்ப் படையை உருவாக்கி உலகப் புகழ் பெற்றவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். இரண்டாம் உலகப் போரின் நிறைவில், ஜப்பான் சரணடைந்த தகவல் வெளியானபோது, அவர் விமான விபத்தில் இறந்து விட்டதாகக் கூறப்பட்டது. இதனால், அவரது மரணத்தில் சில சந்தேகங்களை எழுப்பப்பட்டது.

மேலும், அவர் விமான விபத்துக்குப் பிறகு உயிருடன் இருந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியானது. அவர் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளியானதால் சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய உண்மை என்ன என்பதில் மர்மம் நிலவியது. அடிக்கடி அவரைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும்.

அந்த வரிசையில் கடந்த சில தினங்களாக இங்கிலாந்து இணைய தளம், சுபாஷ் சந்திர போஸின் மரணம் நிகழ்ந்த தேதி, மற்றும் அவர் உடல் எரியூட்டப்பட்டு இறுதிச் சடங்கு நடந்த தேதி போன்ற விவரங்களை உரிய ஆவணங்களுடன் வெளியிட்டது. தற்போது ஜெர்மனியில் வசித்து வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் மகள் அனிதா போஸ், அந்த இணைய தள ஆவணங்களை பார்வையிட்டு, அவை நம்பும்படி இருப்பதாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் நேதாஜியின் மரணம் தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், அவர் மறைவு தொடர்புள்ள அனைத்து ஆவணங்களையும் வெளியிட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நேதாஜியின் பிறந்த நாளான ஜன.23 சனிக்கிழமை இன்று அவர் மரணம் தொடர்பான 100 கோப்புகளை பிரதமர் மோடி வெளியிட்டார்.

கோப்புகளை வெளியிட்ட பின்னர் சுமார் அரைமணி நேரம் அவற்றில் உள்ள குறிப்புகளை படித்துப் பார்த்தார் மோடி. பின்னர் நேதாஜியின் குடும்பத்தாருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஏற்கெனவே, நேதாஜி மரணம் தொடர்பாக  64 முக்கிய ஆவணங்களை மம்தா பாணர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசும் தமது ஆவணக் காப்பகத்தில் இருந்து 100 ரகசிய கோப்புகளை எடுத்து வெளியில் விட்டுள்ளது.

இது குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட செய்திகள்…

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.