சந்தித் தெருவில் அமர்பவனே! சங்கடம் நீக்கிச் சிரிப்பவனே!

இலக்கியம் கவிதைகள்
chathurthi special
chathurthi special

முந்தைய தேவர்க்கு மூத்தவனே
தொந்திக் கணபதி தூயவனே

சந்தித் தெருவில் அமர்பவனே
சங்கடம் நீக்கிச் சிரிப்பவனே

சித்தி புத்தி சேர்த்தவனே
சிந்திப் பவரைக் காப்பவனே

சக்தி உமையின் பாலகனே
பக்திக்கு உருகும் பாமரனே

சங்கர சிவனின் புத்திரனே
ஐங்கரம் கொண்ட வித்தகனே

வேலன் முருகன் சோதரனே
வேணும் வரந்தரும் சோபனனே

மாலன் நாரணன் மருமகனே
மாறா விதியும் அறுப்பவனே

உனதிரு சரணம் பிடித்தோமே
மனதிரு மங்கள மறையவனே.

~ பத்மன்


கண பதி யானை முகத் தானை
குண நிதி யானை கரத் தானை
தும்பிக் கை யானை அங்குசத் தானை
நம்பித் தொழு வானை நலஞ்செய் வானை…

துயர் அறுப் பானை வயிற் றானை
உயர் வரத் தானை உயிர்த் தானை
அழகிற் பெரி யானை அருள் வானை
தொழுது நிற்கின் றோம் தொண்டர் நாமே!

உமை யுதித் தானை உயர்ந் தானை
நமைக் காப் பானை நல் லானை
செய்தமிழ் வல் லானை செய் வானை
முத்தமிழ் தரு வானை போற்று கின்றோம்…

~ செந்தமிழன் சீராமன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.