விவசாயிகளின் மரணத்தை தடுத்த நிறுத்துங்கள்; 5ஆம் தேதி சாலைமறியல்: பி.ஆர்.பாண்டியன்

Published:

சென்னை:

தண்ணீர் இன்றி கருகும் பயிர்களைப் பார்த்து உயிரிழக்கும் விவசாயிகளின் மரணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அதுகுறித்து ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும் என்றும் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் கோரியுள்ளார்.

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று கோரி வரும் 5ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்திற்கு ஆதரவு கேட்டு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை பி.ஆர். பாண்டியன் சந்தித்துப் பேசினார்.

சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது:

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வலியுறுத்தி விவசாய சங்கங்களின் சார்பில் வரும் 5-ம் தேதி நடைபெற உள்ள சாலைமறியல் போராட்டத்திற்கு அரசியல் கட்சிகளிடம் விவசாய சங்கங்கள் ஆதரவு கோரி வருகின்றன.

தமிழகத்தில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. 33 சதவீதத்திற்கும் குறைவாக மழை பெய்தால் வறட்சி மாநிலமாகத்தான் அறிவிக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

மேலும், காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிடாமல் இருக்கிறது. அதுகுறித்த சிக்கல்கள் இன்னும் நீடித்து வரும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். அதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து நீரின்றி கருகும் பயிர்களால் விவசாயிகளின் மரணம் தொடர்கதையாகிவிட்டது.

எனவே, தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளின் தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க அரசு குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது வெளியிட வேண்டும். தமிழக அரசு கேட்கும் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். அதற்கான நெருக்கடியை மாநில அரசு வழங்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் வரும் 5ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆதரவைக் கேட்டோம். போராட்டத்திற்கு திமுக ஆதரவு தருவது பற்றி ஆலோசித்து கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார் என்று பி. ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img