பச்சைப்பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்: மதுரையில் உற்சாகம்

Published:

மதுரை:
பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் வந்த கள்ளழகர், வைகை ஆற்றில் இன்று காலை 6 மணிக்கு இறங்கி, பக்தர் வெள்ளத்தில் மிதந்தார்.

ஆண்டாள் சூடிக் களைந்த மாலை, பரியட்டம் அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதைக் காண இரவு முதலே பக்தர்கள் வெள்ளம் போல் திரண்டிருந்தனர். அவர்களின் உற்சாகத்தைக் காணவே தாம் வந்தது போல், அழகர்மலை திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பிரான், வைகை ஆற்றில் இறங்கி, பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழா, தேரோட்டத்துடன் நிறைவடைந்ததையடுத்து, கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக திங்கள்கிழமை அழகர்மலையிலிருந்து புறப்பட்டு அப்பன்திருப்பதி, கள்ளந்திரி என வழிநெடுக பக்தர்கள் வெள்ளத்தில் பவனி வந்த கள்ளழகர் செவ்வாய்க்கிழமை நேற்று காலை 6 மணிக்கு மூன்றுமாவடி வந்தார்.

அங்கே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை கோவிந்தா, கோவிந்தா என கோஷங்களை எழுப்பி, அழகரை எதிர்கொண்டு அழைத்தனர். பின் செவ்வாய் நேற்று மாலை 5 மணிக்கு அழகர் புறப்பாடு கண்டு, அம்பலக்காரர் மண்டபத்துக்கு வந்தார். அழகர் தாம் வந்த வழி யெங்கிலும் அன்பர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோவிலிலுக்கு இரவு 9.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கே திருமஞ்சனம் கண்டு, தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். நள்ளிரவு 12 மணிக்கு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு, தமுக்கம் கருப்பணசாமி கோவிலுக்குப் புறப்பட்ட அழகர் வெட்டிவேர் சப்பரத்திலும், 3 மணிக்கு தமுக்கம் எதிரில் ஆயிரம் பொன் சப்பரத்திலும் எழுந்தருளினார்.

தொடர்ந்து அதிர்வேட்டுகள் முழங்க தங்கக் குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டு’ உடுத்தி அதிகாலை வைகை ஆற்றுக்கு வந்தார். அங்கே வீரராகவப் பெருமாள் கள்ளழகரை எதிர்கொண்டு வரவேற்றார். இதன் பின் காலை 6 மணி அளவில் வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு காட்சி தந்து அருள் பாலித்தார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அழகரை எதிர்கொண்டழைக்க மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்தது. மதுரை நகர் முழுவதும் எங்கே நோக்கினும் பக்தர் கூட்டம்தான். பச்சைப் பட்டுடுத்தி வந்த கள்ளழகர் தம் வாழ்வில் சுபிட்சத்தையும் செழுமையையும் வழங்குவார் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் கூறினர். சித்திரை மாத வெயிற்காலம் என்பதால், தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, குளிர்வித்தனர். விசிறிகள் கொண்டு வீசி, அன்பர்களுக்கு பலர் தொண்டு புரிந்தனர்.

 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img