கொரோனா: போரூர் முதியோர் இல்லத்தில் மூதாட்டிக்கு தொற்று!

உள்ளூர் செய்திகள் சென்னை தமிழகம் பொது தகவல்கள்
old home

சென்னையில் முதல்முறையாக முதியோர் இல்லத்தில் ஒரு மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் கொரோனாவால் முதியவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு அண்மையில் கூறியிருந்தது. ஆகையால் அவர்களுக்கு சிகிச்சையில் முன்னுரிமை அளிக்கவும், அவர்களை பாதுகாக்கவும் கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கம், செட்டியார் அகரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான முதியோர் இல்லம் ஒன்று உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் தங்கி உள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு இங்கு தங்கியிருந்த 85 வயது மூதாட்டிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டதையடுத்து அந்த மூதாட்டியை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அந்த மூதாட்டி மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள் அந்த பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து கிருமிநாசினிகள் தெளித்து வருகின்றனர். மேலும் இந்த முதியோர் இல்லத்தில் 30-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதால் அவர்களை அங்கேயே தனிமைப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மூதாட்டிக்கு கொரோனா பரவியது எப்படி என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கு இருக்கும் மற்ற முதியவர்களுக்கும் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யும் பணி நடந்து வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.