ஸ்ரீபெரும்புதூரில் 14 வயது மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூரில் 14 வயதுடைய 7ஆம் வகுப்பு பயிலும் மாணவியை கர்ப்பமாக்கிய ஆசிரியரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த செரப்பணஞ்சேரியைச் சேர்ந்த 14 வயது மாணவி, அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவரை அந்தப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் லோகநாதன்(45) பள்ளியின் கணினி அறையில் வைத்து பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி கர்ப்பமுற்றுள்ளார். இது குறித்து அந்த மாணவி கூறியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சோதித்ததில் மாணவி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து போலீஸில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் லோகநாதனைக் கைது செய்து, ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர். கைதான ஆசிரியர் லோகநாதனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து மாவட்ட கல்வித் துறையும் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.