திண்டுக்கல்:
டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் பெருகி உயிர்ப்பலிகள் ஏற்படுமே என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார். அவரது பேச்சால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன. சில இடங்களில், டாஸ்மாக் மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது அரசுப் பணியாளர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் எனும் பிரிவில் வழக்குகளும் பதிவு செய்யப் பட்டன. இந்நிலையில், டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் ஆங்காங்கே போராட்டங்களை நடத்தியே வருகிறார்கள்.
அரசு டாஸ்மாக் மூலமான வரி வருவாய், விற்பனை வருவாயை கணக்கில் கொண்டுள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்த காலத்தில், டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராடியவர்களை கருணையற்ற முறையில் போலீஸாரைக் கொண்டு அடக்கி ஒடுக்கினார். இந்நிலையில் இந்த அரசும் அதற்கு ஆதரவாகவே உள்ளது என்பது, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சால் உறுதிப் படுத்தப் பட்டுள்ளது.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் 114 பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் விழா நடந்தது. அவற்றை பயனாளிகளுக்கு வழங்கி வைத்துப் பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அப்போது அவர் பேசியது:-
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களில் மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டம் மிகவும் முக்கியமானது. இந்தத் திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் ரூ. 250 கோடி மானியத்தில் 1 லட்சம் அம்மா ஸ்கூட்டர்கள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ரூ. 7 கோடியே 72 லட்சம் மதிப்பில் 3,090 பெண்களுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படவுள்ளது. அதன் முதல் கட்டமாக 114 பேருக்கு இந்த ஸ்கூட்டர் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும்.. என்று பேசினார்.
அப்போதுதான், டாஸ்மாக் கடைகள் குறித்தும் பேசினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். அவர் பேசியதில், அரசு டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டால் கள்ளச் சாராயம் விற்பனை அதிகரித்துவிடும். கள்ளச்சாராயத்தைக் குடித்து அவனவன் செத்து விடுவான். அதனால் உயிரிழப்புகள்தான் ஏற்படும். எனவே உயிரிழப்புகளை தடுக்கவே அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என புரட்சித் தலைவர் பாடியுள்ளார். குடிப்பவன் தானாகவே திருந்தினால்தான் இது முடிவுக்கு வரும்” என்றார். அவரது பேச்சு இப்போது பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.


