சென்னை:
தற்கொலை செய்து கொண்ட காவலர் அருண் ராஜின் உடலுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. இதை அடுத்து அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஜெயலலிதா சமாதியில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஆயுதப் படை போலீஸார் 12 பேர் தினமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 4 ஷிப்டுகளாக இவர்கள் பணியில் ஈடுபடுகிறார்கள்.
சனிக்கிழமை நேற்று நள்ளிரவு 2 மணி ஷிப்டில் ஆயுதப்படை காவலர் அருண்ராஜ் உள்ளிட்ட 4 பேர் பணியில் இருந்தனர். இவர்களில் அருண்ராஜ் உள்ளே செல்லும் பாதையை ஒட்டியுள்ள இடத்தில் சமாதியின் உள்புறம் பணியில் இருந்தார்.
இந்நிலையில் திடீரென ஞாயிறு இன்று அதிகாலை 4.50க்கு ஜெயலலிதா சமாதி அருகில் துப்பாக்கி வெடிச் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்த போலீஸ்காரர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அப்போது போலீஸ்காரர் அருண்ராஜ் தாடையில் குண்டு பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மற்ற காவலர்கள் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அருண் ராஜ் உடனடியாக அருகிலுள்ள திருவல்லிக்கேணி கோசா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அருண்ராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். துப்பாக்கியால் சுட்டதும் அருண் ராஜின் உயிர் சம்பவ இடத்திலேயே பிரிந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் சாரங்கன், இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் பர்வேஷ் குமார் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
பின்னர் அருண் ராஜ் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப் பட்டது. இன்று பிற்பகல், ராயப்பேட்டை மருத்துவமனையில் அருண் ராஜ் உடல் பிரேதப் பரிசோதனை நிறைவுற்றது. இதை அடுத்து காவலர் அருண்ராஜ் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட அருண் ராஜுக்கு வயது 26. அவர் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த முடிவை மேற்கொண்டாரா? அல்லது பணிச்சுமை காரணமாக மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
மதுரை பெருங்குடியைச் சேர்ந்த அருண்ராஜ், கடந்த 2013ஆம் ஆண்டு காவல் துறை பணியில் தேர்வாகி, சென்னை ஆயுதப்படைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டார். 10 நாட்களுக்கு முன்பு தான் மதுரை சென்றுவிட்டு சென்னை திரும்பினார். இந்நிலையில், அருண்ராஜ் தற்கொலை தொடர்பாக அண்ணா சதுக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருண்ராஜின் உடல் சொந்த ஊரான மதுரைக்கு ஆம்புலன்சில் எடுத்துச் செல்லப்படுகிறது.
அருண்ராஜின் தந்தை மலைராஜன் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவராக உள்ளார். இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்கள். 2-வது மனைவியின் பெயர் பொன்னழகு. இவர்களுக்கு அருண்ராஜ் உள்ளிட்ட 3 மகன்கள்.
தனது மகன் இறப்பு குறித்து கூறிய மலைராஜன், எனது மகன் அருண்ராஜ் நேற்று இரவு 7.30 மணி அளவில் போனில் என்னுடன் பேசினான். அவனிடம் நலம் விசாரித்தேன். வங்கிக் கணக்கில் இன்று பணம் போட்டுவிடுவதாகக் கூறினான். மேலும் இங்கு பணிச்சுமை அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தான். அப்போது நான் 2 மாதம் பொறுத்திருக்குமாறும் அதன் பிறகு மதுரைக்கு மாற்றலாகி வருவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தேன். இந்த நிலையில் இன்று அவன் தற்கொலை செய்து கொண்டான். இதை என்னால் நம்ப முடியவில்லை… என்று கூறி கதறி அழுதார்.
தற்கொலை செய்து கொண்ட அருண்ராஜ் பி.காம். படித்துக் கொண்டிருக்கும்போதே விளையாட்டு வீரர் கோட்டாவில் காவல் துறைன் பணியில் சேர்ந்துள்ளார். இந்நிலையில், அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது. இறுதிச் சடங்குக்காக அவரது உடலை மதுரை கொண்டு செல்கின்றனர்.


