மும்பை:
சிபிஐ.,யால் கைது செய்யப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், இன்று மும்பை பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி முன்னிலையில் வைத்து விசாரிக்கப் பட்டார். ஆனால் அவர், தந்தை சொல்லிக் கொடுத்தபடி கள்ள மௌனம் காத்ததாக விசாரணை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோருக்குச் சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் பெற்றுத் தருவதில் கார்த்தி சிதம்பரம் இடைத் தரகராக செயல்பட்டு 10 மில்லியன் அமெரிக்க டாலர் பயன் அடைந்தார் என்றும், இதற்காக தந்தையின் நிதியமைச்சர் என்ற பதவியை தவறாகப் பயன்படுத்தினார் ஏன்பதும்தான் கார்த்தியின் மீதுள்ள குற்றச்சாட்டு. இந்த வழக்கில் கடந்த பிப். 28ஆம் தேதி கார்த்தி சிதம்பரம் சென்னையில் வைத்து சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தற்போது கார்த்தி சிதம்பரம் சிபிஐ., அதிகாரிகளின் விசாரணைக் காவலில் இருக்கிறார். அவரை மும்பை சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி முன்னிலையில் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை கார்த்தி மும்பைக்கு அழைத்து வரப் பட்டார். கொலை வழக்கில் பைகுலா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி ஆகியோர் முன்னிலையில் கார்த்தி சிதம்பரம் தனித்தனியே விசாரிக்கப்பட்டார்.

மும்பை பைகுல்லா சிறையில் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து கார்த்தி சிதம்பரத்திடம் மாலை வரை விசாரணை நடத்தினர் அதிகாரிகள். தொடர்ந்துன் கார்த்தியிடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு பெற்றதாகவும், ஆனால் சி.பி.ஐ.யின் பல கேள்விகளுக்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்காமல் மௌனம் சாதித்தாகவும் கூறப்படுகிறது.
ஆனால், விசாரணை முடிந்து வெளியில் வந்த கார்த்தி சிதம்பரம், செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐ.என்.எக்ஸ் விவகாரத்தில் தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது என்றும், அரசியல் நோக்கத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், தன் தந்தையார் சொல்லிக் கொடுத்தபடியே கூறிச் சென்றாராம்.
முன்னதாக, இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். கடந்த 2007ஆம் ஆண்டு ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடி முதலீடு பெற கார்த்தி சிதம்பரம் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார் என்றும், இதற்காக கார்த்தி சிதம்பரம் பங்குதாரராக இருக்கும் அட்வான்டேஜ் ஸ்டிராடஜ் கன்சல்டிங் பிரைவேட் லிமிட் நிறுவனம் மூலம் கடந்த 2008ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி 10 லட்சம் பெற்றதாகவும் சிபிஐ கடந்த ஆண்டு மே மாதம் வழக்குப் பதிவு செய்தது.
ஐஎன்எக்ஸ் மீடியா இயக்குநர்களில் ஒருவரான இந்திராணி முகர்ஜி, வெளிநாட்டில் இருந்து முதலீட்டைப் பெற, கார்த்தி சிதம்பரத்துக்கு ரூ.3 கோடிவரை லஞ்சம் கொடுத்ததாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் குறிப்பிடத் தகுந்த ஆதாரம் கிடைத்ததை அடுத்தே லண்டனிலிருந்து சென்னை வந்த கார்த்தி சிதம்பரம், சிபிஐ சிறப்பு பொருளாதாரப் பிரிவு அதிகாரிகளால் பிப்.28 அன்று கைது செய்யப் பட்டார்.

கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க 15 நாள் காவல் கோரியது சிபிஐ., ஆனால், அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ நீதிமன்றம் அனுமதி அளித்தது. இருப்பினும், கார்த்தி சிதம்பரம், எந்த விதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்காமல், கள்ள மௌனம் காத்து வருகிறார் என்று கூறப் படுகிறது. நீதிமன்றத்திலேயே வைத்து, ப.சிதம்பரம் தன் மகனிடம் நான் இருக்கிறேன், தைரியமாக இரு என்று மேலும் ஒரு அதிகார துஷ்பிரயோகத்தை நிகழ்த்தியிருக்கிறார் என்று கூறப் படுகிறது. மேலும், இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் மீதும் குற்றச்சாட்டுகள் வலுவாக உள்ளன. நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தன் மகனின் தொழிலுக்கு உதவுமாறு சொல்லித்தான் தாங்கள் இந்த முறைகேட்டில் இறங்கியதாக இந்திராணி கூறியிருக்கிறாராம். எனவே ப.சிதம்பரம் அனைத்து வழிகளிலும் தனது மகனுக்கு தேவையான உதவிகளைச் செய்துவிடுவார் என்று அதிகாரிகள் மட்டத்தில் கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை 8 மணிக்கு ஏர் இந்தியா விமானத்தின் மூலம் தில்லியில் இருந்து மும்பைக்கு கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர். இது குறித்துக் கூறிய அதிகாரிகள், ”ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான இந்திராணியும் பீட்டரும் அன்னிய முதலீடு தொடர்பாக அரசு ஒப்புதல் பெறுவது குறித்து 2007ஆம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை நார்த் பிளாக் அலுவலகத்தில் சந்தித்துள்ளனர். அப்போது அவர் தனது மகனின் தொழிலுக்கு உதவுமாறு கோரியுள்ளார். அதன்படி, கார்த்தி சிதம்பரத்தை இருவரும் சந்தித்துப் பேசியபோது, அவர் 10 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் கேட்டதாக இந்திராணி முகர்ஜி மாஜிஸ்திரேட் முன் கடந்த மாதம் 28ஆம் தேதி அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து, நடத்தப்பட்ட பேச்சுக்குப் பின் பேரம் படிந்து, 7 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சமாக கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி தெரிவித்துள்ளார். எனவேதான் மும்பை பைகுல்லா சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி முன் தனித்தியாக நேருக்கு நேர் கார்த்தி சிதம்பரத்தை நிறுத்தி விசாரிக்க முடிவு செய்தோம்” என்றனர்.
இருப்பினும், சிபிஐ நீதிமன்றம் கொடுத்த 5 நாள் அவகாசத்துக்குள் கார்த்தியிடம் என்ன விசாரிக்க முடியும் என்று கையைப் பிசைகின்றனர் அதிகாரிகள்.


