கமலுக்கு போலீஸ் பாதுகாப்பு: அமைச்சர்களின் அடிவருடிகளால் அச்சுறுத்தல்?

Published:

kamal house - 2026

சென்னை:

தமிழகத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருக்கெடுத்துள்ளது என்று தமிழக அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தினாலும் சுமத்தினார், நடிகர் கமலஹாசன் இதுவரை இல்லாத வெளிச்சத்துக்கு வந்துவிட்டார். அதற்கு, அமைச்சர்களின் பதிலடிகளும் மறுப்புரைகளும், மிரட்டல்களுமே காரணம் என்றாகிவிட்டது. இந்நிலையில், கமல்ஹாசனின் வீட்டுக்குப் பாதுகாப்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, கமல்ஹாசனிடம் அவரது குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று அமைச்சர்கள் கேட்டனர்.  அதனால், தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் நடக்கும் ஊழல்கள் தொடர்பான ஆதாரத்தை அந்தந்த துறை அமைச்சர்களின் இணைய தள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி வேண்டுகோள் விடுத்தார் கமல்ஹாசன். இதை அடுத்து,  கமல்ஹாசனின் ஆதரவாளர்களும், சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் ஊழல்கள் குறித்து ஆதாரங்களை திரட்டினார்கள். ஆனால் அமைச்சர்களின் இணைய தள முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் திடீரென இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதால் புகார்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதையடுத்து ஊழல் புகார்களை லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவுக்கு அனுப்புங்கள் என்று கமல்ஹாசன் புதிய வேண்டுகோள் விடுத்தார். மேலும் ஆலந்தூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு அலுவலகத்தை எப்படி தொடர்பு கொள்வது என்ற விவரத்தையும் அளித்தார்.  இதையடுத்து தமிழக அமைச்சர்களுக்கும் நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையே வார்த்தைப் போரும் கருத்து மோதலும் வளர்ந்து கொண்டே வருகிறது.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் தொடர் கருத்துகள், தமிழக அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுவது போல் உள்ளதாக அதிமுக., நிர்வாகிகள் பேசிக் கொண்டனர். எனவே கமலஹாசனின் நடவடிக்கைகளால் அதிருப்தியில் உள்ள அதிமுக., நிர்வாகிகள் மூலம், கமல்ஹாசனுக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன் வீட்டுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையும், டிடிகே சாலையும் சந்திக்கும் சிக்னல் பகுதியில் கமல்ஹாசனின் வீடு உள்ளது.  இது, தேனாம்பேட்டை போலீஸ் நிலைய எல்லைக்குள் வருகிறது. ஆனால் தி.நகர் மற்றும் மயிலாப்பூர் போலீஸ் சரகத்தின் மையப் பகுதியாக வீடு அமைந்துள்ளதால் மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் சரவணன், தி.நகர் காவல் துணை ஆணையர் அரவிந்தன் இருவர் தலைமையிலும் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 13 போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கமல்ஹாசன் வீட்டின் முன் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.  அவரின் வீடு அருகே வந்து செல்லும் அனைவரையும் கண்காணிப்பதுடன், சந்தேகப்படும் நபர்களிடம் உரிய விசாரணை நடத்தவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

மேலும், சென்னையில் உள்ள அதிமுக., நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.  இந்தப் பணியில் சுமார் 50 போலீசார் ஈடுபட்டுள்ளனராம். தனக்கு அதிக பாதுகாப்பு தேவை என்று எந்தவிதக் கோரிக்கையும் கமல்ஹாசன் விடுக்கவில்லை என்றாலும், அவர் செல்லும் நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ள பகுதியிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img