அசல் ஓட்டுனர் உரிமத்துடன் இருக்க வேண்டும்: இன்று முதல் கட்டாயமாகிறது!

Published:

traffic police in chennai - 2026

சென்னை:

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களுடன் இன்று முதல் வாகனங்களை ஓட்ட வேண்டும். அசல் ஓட்டுனர் உரிமம் இல்லாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.

மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 3ன்படி உரிய வாகன ஓட்டுனர் உரிமம் (டிரைவிங் லைசென்ஸ்) இல்லாமல் எவரும் பொது இடத்தில் வாகனத்தை இயக்கக்கூடாது என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் மோட்டார் வாகன சட்டம் 1988, பிரிவு 130ன்படி பொது இடத்தில் சீருடையில் உள்ள எந்த ஒரு காவல்துறை அதிகாரியும் வாகன ஓட்டுனரிடம், ஓட்டுனர் உரிமத்தைக் கேட்கும்போது, அந்தக் காவல் அதிகாரியிடம் அவர்களது ஓட்டுனர் உரிமத்தைக் காண்பிக்க வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டினால், 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படலாம். மேலும் சாலைப் பாதுகாப்புக்கான உச்ச நீதிமன்றக் குழு, சாலை விபத்துகளைக் குறைக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் ஓட்டுனர்களின் ஓட்டுனர் உரிமத்தை தாற்காலிகமாக நிறுத்திவைக்கவோ அல்லது ரத்து செய்யவோ அனைத்து மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

எனவே, செப்டம்பர் 1 இன்று முதல் வாகனங்களை ஓட்டும் போது அனைத்து ஓட்டுனர்களும் அசல் ஓட்டுனர் உரிமத்தை தங்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அவ்வாறு உரிய ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

அரசு உத்தரவுக்கு இணங்க வாகன ஓட்டுனர்கள் வாகனங்களில் செல்லும் போது கண்டிப்பாக அசல் ஓட்டுனர் உரிமங்களை எடுத்துச்செல்ல வேண்டும். எனவே தமிழகம் முழுவதும் இன்று முதல் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும், போலீசாரும் வாகன சோதனை நடத்தி, ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்துள்ளார்களா என்பதை ஆய்வு செய்வார்கள்.

இருப்பினும், இது மேலும் லஞ்ச ஊழல் பெருகத்தான் வழி செய்யும் என்று அரசியல் கட்சிகளும் பொதுமக்களில் பலரும் குறை கூறி வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img