அரசு அளித்த ரூ.7 லட்சத்தைப் பெற அனிதா குடும்பத்தினர் மறுப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் திருச்சி

சென்னை:

தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளது.

‘நீட்’ தேர்வு எழுதி அதில் தேறாமல் போன அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா, அரசியல் பின்புலத்துடன் நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது போராட்டம் தோல்வியில் முடிந்தது.

மருத்துவப் படிப்பில் தன்னால் சேர முடியாத வேதனையில் நேற்று முன்தினம் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மாணவி அனிதாவின் தற்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் மாணவி அனிதா குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்கப்படும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

இதை அடுத்து, தமிழக அரசு வழங்கிய நிதி உதவி ரூ.7 லட்சத்துக்கான வரைவோலையை எடுத்துக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் அனிதா குடும்பத்தாரிடம் கொடுக்க முயன்றார். அப்போது தமிழக அரசு அறிவித்த ரூ. 7 லட்சம் நிதியுதவி பெற அனிதாவின் குடும்பம் மறுப்பு தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை அரசு அளிக்கும் நிதி உதவியைப் பெற மாட்டோமென ஆட்சியரிடம் பேசியதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.