சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு: சிலையில் கருணாநிதி பெயர் நீக்கப்பட்டதால் வலுக்கும் எதிர்ப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை

சென்னை:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு அமைந்த மணி மண்டபத்தைத் திறந்து வைத்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அப்போது அவர், அரசியலில் இரு துருவங்களாக இருந்த எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் இருவரும் ஒரு தாய் பிள்ளைகள் போல வாழ்ந்தவர்கள் என்று பேசினார்.

சென்னை, அடையாறில் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கான மணிமண்டபம். இதனை இன்று காலை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா போன்ற நாடுகளாலும் பாராட்டப்பட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பெயரில் விருதை அறிவித்தவர் ஜெயலலிதா. தாயை நேசிப்பவர்கள் மிகச் சிறந்த உயரத்துக்கு வருவார்கள். அவர்களில் மக்கள் திலகமும், நடிகர் திலகமும் மிகச் சிறந்த உதாரணங்கள். உலகத் தமிழர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். அவரின் பெருமைகளை நினைவுகூர்வது தமிழக மக்களுக்கே பெருமை” என்று பேசினார்.

sivaji statue - 2026

இதனிடையே சென்னை மெரினா கடற்கரையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் அமைந்த சிவாஜி சிலையை அங்கிருந்து அப்புறப்படுத்தி, இந்த மணிமண்டப முகப்பில் வைத்துள்ளார்கள். அதில், சிலையை அப்போது திறந்து வைத்த கருணாநிதியின் பெயர் பீடத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்தது. இதற்கு மு.க.ஸ்டாலின் முன்னதாக கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தனது டிவிட்டர் பதிவில் இது குறித்து குறிப்பிட்ட நடிகர் எஸ்.வி.சேகர்,
“சிவாஜி மணி மண்டபம்” புதிய சிலை செய்யாத போது கலைஞரின் பெயர் கல்வெட்டை அகற்றியது அரசியல் அநாகரீகம். தமிழகத்தில் இன்னும் அரசியல் அநாகரீகம் இருப்பதை நிரூபிப்பதின் அடையாளமாக மாபெரும் கலைஞன் சிவாஜி விழாவை பயன் படுத்தியது கேவலம். அம்மாவின் ஆணைப்படி இப்ப திறந்தவங்க பேர் வரணும்னா சிவாஜி பீடத்துல கலைஞர் கல்வெட்டு போக பாக்கி இருக்கிற 3 சைடும் இஷ்டத்துக்கு எழுதிக்கலாமே.” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.