சென்னை தனியார் டிவி அலுவலகம் மீது ‘டிபன் பாக்ஸ்’ குண்டுவீச்சு

உள்ளூர் செய்திகள்

  சென்னை: சென்னையில் உள்ள தனியார் டிவி அலுவலகம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் இன்று அதிகாலை 2 டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியதாக தனியார் டிவி செய்தி தெரிவித்தது. சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு அந்த தனியார் டிவியில், தாலி பெண்களுக்கு பெருமையா? சிறுமையா? என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை ஏற்க முடியாத இந்து மத அமைப்பினர் சிலர் அந்த தொலைக்காட்சியின் ஒளிப்பாதிவாளரைத் தாக்கியதாக புகார் கூறப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை தொலைக்காட்சி அலுவலகத்தின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் 2 டிபன் பாக்ஸ் குண்டுகளை வீசி தாக்கியுள்ளதாக செய்தி வெளியானது. அதிகாலை 3 மணி அளவில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது. அலுவலகத்தை நோட்டமிட்ட இரு சக்கர வாகனங்களில் சென்ற சிலர், சில நிமிடங்களில் திரும்பி வந்து, நுழைவுவாயிலின் அருகே நின்று அடுத்தடுத்து இரண்டு டிபன்பாக்ஸ் குண்டுகளை வீசியுள்ளனர். இந்த குண்டுகள் அலுவலக நுழைவுவாயில் பகுதியில் வெடித்துள்ளன. இதுகுறித்து உடனடியாக கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தடயங்களை சேகரித்தனர். 2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.