விமான நிலைய பெயர்ப் பலகையில் தமிழ் நீக்கப் படவில்லை: இயக்குனர் பதில்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

சென்னை விமான நிலையத்துக்கு வரும் விமானங்களின் வருகை, புறப்பாடு குறித்து விமான நிலையத்தில் வைக்கப்பட்டிருக்கும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் தமிழ், ஆங்கிலம், இந்தி என மூன்று மொழிகளிலும் அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில் ஆங்கிலத்தில் மட்டும்தான் அறிவிப்பு வெளியாகும் என விமான நிலைய இயக்குநர் கூறியதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதற்கு ஏற்ப, இந்தி, தமிழ் தவிர்த்து, ஆங்கிலத்தில் மட்டுமே அறிவிப்பு வெகு நேரமாக வெளியிடப் பட்டு வந்தது. இந்தச் செய்தி, வலைத்தளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்து, தமிழை நீக்கிவிட்டதாகவும், தமிழகத்திலேயே தமிழுக்கு இடமில்லையா என்றும் சமூக வலைத்தளங்களில் பலரும் கொந்தளித்தனர்.

இந்நிலையில், காலை நேரங்களில் அதிகமான விமானங்கள் இயக்கப்படுவதால், மூன்று மொழிகளில் அறிவிப்பு வெளியிடப்படும் போது, அறிவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும், அதனால் தமிழ், இந்தி மொழி அறிவிப்புகள் நீக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், மக்கள் மத்தியில் இதற்கு பெரும் எதிர்ப்பு கிளப்பியது. இதை அடுத்து, சென்னை விமான நிலைய இயக்குனருக்கு பல்வேறு தரப்பினரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டனர். அவர்களின் கேள்விக்கு பதிலளித்த விமான நிலைய இயக்குநர் சந்திரமெளலி, ‘காலை அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டதால், சென்னை விமான நிலைய பெயர்ப்பலகையில், ஆங்கிலத்தில் மட்டும் அறிவிப்பு வெளியானது. மேலும் டிஜிட்டல் அறிவிப்புப் பலகையில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இன்று காலை இந்தப் பிரச்னை ஏற்பட்டது. தற்போது, அது சரி செய்யப்பட்டு விட்டது, எனவே வழக்கம் போல் தமிழிலும் அறிவிப்புகள் வெளியாகும்’ என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.