காதலர் டூ தலைவர்; காகிதப் பூ; விஸ்வரூபம்; கட்டிபுடி வைத்தியர்: கமல் குறித்த கருத்துகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

சென்னை:

நடிகர் கமலஹாசன் இன்று அரசியல் களத்தில் குதிக்கிறார். இன்று மாலை அரசியல் கட்சியைத் துவங்குகிறார். இதனிடையே கமலின் அரசியல் குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அவர்களில் சிலரின் கருத்துகள்…

கமலை இதுவரை காதலராக பார்த்தோம், இன்று தலைவராக பார்க்கிறோம் என்று கூறியுள்ளார், கவிஞர் சினேகன். சினிமா பாடலாசிரியரும், அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடைசி வரை வந்தவருமான சினேகன் கமலுக்கு முன்பே ஆதரவு தெரிவித்திருந்தார்.

”நடிகர்களை காகிதப் பூ என்ற மு.க.ஸ்டாலின் கருத்து சரியானதுதான்” என்று கூறியுள்ளார் அமைச்சர் ஜெயக்குமார். முன்னதாக, காகிதப் பூ மலரும்; மணக்காது என்று கூறியிருந்தார் மு.க.ஸ்டாலின்.

நடிகர் கமல் அரசியல் கட்சி ஆரம்பிப்பது தலைப்புச் செய்திகளாக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு போதும் தலைவராக முடியாது என்று கூறியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

கட்டிப்புடி வைத்தியர் கமல் என்று கூறிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நேற்று விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய போது, நடிகர் கமலுக்கு, தான் என்ன செய்கிறோம் என்பதே தெரியவில்லை. அவர் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களையும் சந்தித்து கட்டிப்பிடி வைத்தியம் செய்கிறார். அரசியல் கட்சி தொடங்குபவர்கள் மாற்றுக்கட்சி தலைவர்களை சந்தித்ததாக வரலாறு இல்லை. கமலின் செயல் கேலிக்கூத்தாக உள்ளது. கமலின் அரசியல் கட்சி தமிழகத்தில் விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பே இல்லை. கமல் கட்சி தொடங்கும் நேரமே சரியில்லை. அவருக்கு சகுனம் சரியில்லை என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.