ஒருதலைக் காதலில் இளைஞரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி மரணம்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

மதுரை: மதுரையில் காதலிக்க மறுத்ததால் இளைஞர் ஒருவரால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட மாணவி சித்ராதேவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள நடுவக்கோட்டையை சேர்ந்தவர் மணிப்பாண்டி. இவரது மகள் சித்ரா. 14 வயதாகும் இவர் அங்குள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்குச் செல்ல சித்ரா ஷேர் ஆட்டோவுக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஓர் இளைஞர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

தீயில் கருகிய சிறுமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனிடையே, சம்பவம் குறித்து அறிந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதில் ஒருதலைக் காதலால் இந்தச் சம்பவம் நடந்திருப்பதாக போலீஸாருக்கு தெரியவந்தது. இதை அடுத்து, மாணவியின் ஊரான நடுவக்கோட்டையைச் சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் (வயது 26) தான் சித்ரா மீது தீ வைத்தார் என்பது தெரியவந்தது.

balamurugan arrested Pouring petrol fire on girl - 2026

கடந்த சில மாதங்களாக மாணவியின் மீது ஒருதலைக் காதலை வளர்த்து வந்துள்ளார், தனியார் மில்லில் வேலை பார்த்து வந்த பாலமுருகன். இவர் சித்ராவிடம் காதலைச் சொன்னபோது மறுத்த அவர், தன் பெற்றோரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார். அவர்கள் பாலமுருகனை கண்டித்தும், அவர் தன் போக்கில் மாறவில்லை.

சித்ராவைப் பின்தொடர்ந்து தன்னைக் காதலிக்குமாறு வற்புறுத்தி, கொலை மிரட்டல், தற்கொலை மிரட்டல் என பல வழிகளைக் கையாண்டுள்ளார் ஆனால், சித்ரா இது குறித்து அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி பாலமுருகனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் அண்மையில் ஜாமீனில் வெளியே வந்த பாலமுருகன், தனது கைதுக்கு பழிவாங்க, சித்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடியுள்ளார். தப்பியோடிய பாலமுருகனைப் பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டது. போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில், புதுப்பட்டி ஆயிரம் கண்ணுடையார் கோவில் அச்சம்பட்டி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகன் கடந்த 17ம் தேதி போலீஸில் சிக்கிக் கொண்டார்.

இந்நிலையில், இன்று காலை மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சித்ரா தேவி இன்று உயிரிழந்துள்ளார்.

கடந்த 2014லும் இதே போன்று, ஒருதலைக் காதல் விவகாரத்தில் திருமங்கலம் அருகே சின்னபூலாம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மீனா, அங்காள ஈஸ்வரி மீது ஆசிட் வீசப்பட்டது. திருமங்கலம் பகுதியில் இது போன்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.