முறைகேடு புகாரில்தான் நடவடிக்கை; கார்த்தியை சிபிஐ கைது செய்ததற்கு தமிழிசை ‘விளக்கம்’ !

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் திருச்சி

திருச்சி:

நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் பேரில்தான் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார்; இது பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று சிபிஐ எடுத்துள்ள நடவடிக்கைக்கு தமிழக பாஜக, தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

திருச்சியில் நடைபெற்ற பாஜக., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழிசை சௌந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது, முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில்தான் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். அது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஆனால் மக்களை தவறாக திசை திருப்புகிறார்கள். தவறு செய்யவில்லை என்று நீதிமன்றத்தில் நிரூபித்து விட்டு வரட்டும் என்று கூறினார்.

பாஜக., இப்போது நடத்தி வரும் தமிழ்த் தாமரை யாத்திரை குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, தமிழ்நாட்டில் தமிழ் தாமரை யாத்திரை தொடங்கப் பட்டுள்ளது. ஏற்கெனவே ஒருநாள் நடத்தப்பட்டு பிரதமரின் தமிழக வருகையை ஒட்டி இடைவெளி ஏற்பட்டது. மீண்டும் யாத்திரை தொடங்கப் பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்களையும் பாஜக., வாக்குச்சாவடி பொறுப்பாளர்களையும் சந்தித்து வருகிறோம்.

தமிழகத்தில் மொழியை வைத்து மோசமான அரசியல் செய்து வருகின்றனர். இந்தி பிரசார சபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட, தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும் என ஆளுநர் கூறியிருக்கிறார். தமிழ்த்தாய்க்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதுதான் பாஜக.,வின் கருத்து. பாஜக., என்றால் தமிழ்நாட்டுக்கோ தமிழுக்கோ தொடர்பு இல்லை என்ற தோற்றத்தை சிலர் ஏற்படுத்தி வருவதை கண்டிக்கிறேன்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதை, அமைக்கவே முடியாது என்று அவர் கூறியதாக தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர். கோதாவரியில் இருந்து 100 டி.எம்.சி. தண்ணீரை கொண்டு வருவதற்கான நடவடிக்கையை பாஜக., எடுத்து வருகிறது. அதேபோல காவிரியில் தமிழ்நாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் பாஜக., வுக்கு மாற்று கருத்தில்லை. அதற்காக பாஜக., முழு முயற்சியை மேற்கொள்ளும் என்று கூறினார் தமிழிசை.

பொதுவாக, மத்திய அரசின் சார்பில் அல்லாது, அரசு தொடர்புடைய அமைப்புகள் மூலம் எடுக்கப் படும் நடவடிக்கைகளுக்கெல்லாம் கருத்து தெரிவிக்கும் உரிமை தனக்கு இருப்பது போல் தமிழிசை கருத்து தெரிவித்து வருவது குறித்து பாஜக.,விலேயே சலசலப்பு ஏற்படுகிறது. பிரதமரே வாய் மூடி மௌனமாக இருந்து, இது போன்ற நிர்வாக நடைமுறைகளில் கருத்து சொல்லாமல் தவிர்க்கும் போது, தமிழக தலைவருக்கு என்ன அத்தியாவசியமோ என்று பாஜக.,வினரே சலசலக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.