மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசுகிறார் ஸ்டாலின்: ஓபிஎஸ் கடும் கண்டனம்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

tamilnadu budget pannerselvam - 2026

சென்னை: சட்டப் பேரவையில் திமுக., செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்த ராமராஜ்ய ரத யாத்திரை, 5 மாநிலங்களைக் கடந்து தமிழகம் வந்தது. இது, ராமஜென்ம பூமியில் ராமர் கோயில், ராமராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத் திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் என சில கோரிக்கைகளை வலியுறுத்தி, விழிப்பு உணர்வைத் தூண்டும் வகையில் இந்த ரத யாத்திரை கிளம்பியது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரா, கர்நாடகம், கேரளம் வழியாக தமிழகம் வந்த ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் செங்கோட்டை வழியாக நுழைந்து, ராஜபாளையம் வந்து, அங்கிருந்து ஸ்ரீவில்லிபுத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை வருகிறது. மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. பின்னர் இந்த ரதம், ராமேஸ்வரம் செல்கிறது.

சிவராத்திரி அன்று அயோத்தியில் துவங்கிய இந்த யாத்திரை, 41 நாட்கள் 5 மாநிலங்களைக் கடந்து, வரும் மார்ச் 25 ராம நவமி அன்று ராமேஸ்வரத்தில் நிறைவடைகிறது. கேரளத்தில் இருந்து தமிழகம் வந்த இந்த ரதயாத்திரை மூலம், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும், எனவே அனுமதி வழங்கக் கூடாது என திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையில் வலியுறுத்தின. நேற்று தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக எம்.எல்.ஏ-க்கள் அபுபக்கர், கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்து வெளிநடப்புச் செய்தனர்.

இந்நிலையில், இன்று காலை, தமிழகம் வந்த ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அந்தத் தீர்மானத்தின் மீது மு.க.ஸ்டாலின் பேசிய போது…

ரத யாத்திரையால் மதக் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. விஸ்வ ஹிந்து பரிஷத் இந்த ராம ராஜ்ய ரத யாத்திரையை அனுமதித்ததற்கு கண்டனம் தெரிவிக்கிறோம். மத சார்பற்ற தன்மைக்கும் நாட்டின் பன்மைத் தன்மைக்கும் பாதிப்பு ஏற்படும் வகையில் இந்த அரசு அனுமதித்துள்ளது. தற்போது நடப்பது அதிமுக ஆட்சியா? பாஜக ஆட்சியா? என்று கேள்வி எழுப்பினார்.

மு.க.ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ஸ்டாலின் பேசுகிறார் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.