திருநெல்வேலி: ராம ராஜ்ய ரத யாத்திரை பல்வேறு சர்ச்சைகளினூடே நெல்லை மாவட்டத்தைக் கடந்து சென்றுவிட்டது. இன்று வரை போடப் பட்டிருந்த 144 தடை உத்தரவும் விலக்கிக் கொள்ளப் பட்டு விட்டது.
இந்நிலையில், ரத யாத்திரையில் வாகனங்களுடன் கலந்து கொண்டவர்களுக்கு இப்போது சிக்கல் தொடங்கியிருக்கிறது. நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 20 ஆம் தேதி நடைபெற்ற ராம ராஜ்ய ரத யாத்திரையின் போது 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனங்களில் வந்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக, 300க்கும் மேற்பட்டவர்கள் மீது செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், ரத யாத்திரை வந்தவர்களிடம் மத ரீதியாக கோஷம் எழுப்பி வகுப்பு மோதலைத் தூண்டி விட்டதாக சிலர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் கடந்த 20 ஆம் தேதி நடைப்பெற்ற ராமராஜ்ஜிய ரத யாத்திரையின் போது 144 தடை உத்தரவை மீறி ரதத்தின் பின்னால் வந்த ஒரு தரப்பைச் சார்ந்தவர்களிடம் செங்கோட்டை பிரானூர் பார்டரில் வகுப்பு மோதலைத் தூண்டும் விதமாக கோஷமிட்டு தகராறு செய்த மற்றொரு தரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் உள்பட 5க்கும் மேற்பட்டவர்கள் மீது செங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இது போல், நெல்லையில் இன்று அதிகாலை ராம ரத யாத்திரைக்கு வந்து கலந்து கொண்டவர்களைக் கைது செய்து வாகனங்ளைப் பறிமுதல் செய்துள்ளது நெல்லை மாவட்ட காவல் துறை!
ராம ராஜ்ய ரத யாத்திரை கடந்து சென்றுவிட்டாலும், போலீஸாரின் இது போன்ற நடவடிக்கைகளால் தான் மீண்டும் சிக்கல் தொடங்கியிருக்கிறது. பறிமுதல் செய்யப் பட்ட வாகனங்கள் அவ்வளவு எளிதில் மீண்டும் கைக்குக் கிடைக்காது. பல்வேறு காவல் நிலையங்களில் மழையிலும் வெயிலிலும் தூசி படிந்து துரு பிடித்து ஒன்றுக்கும் உதவாமல் போய்க் கிடக்கும் எண்ணற்ற இரு சக்கர வாகனங்களைப் போல், இந்த வாகனங்களும் போய்விடும் என்று இப்போது கவலை தெரிவிக்கின்றனர், ரத யாத்திரையில் கலந்து கொண்டவர்கள்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாலர் அருண் சக்தி குமார், ராமராஜ்ய ரத யாத்திரை எதிர்பாளர்கள் பிரச்னையை மிகத் திறம்படக் கையாண்டார் என்று சமூக வலைத்தளங்களிலும் நேரிலும் பாராட்டியவர்கள் இப்போது அப்படியே மாற்றிப் பேசி வருகிறார்கள். 144 தடை உத்தரவு மூலம் மாவட்டத்தில் பதற்றத்தைத் தணிக்க தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் துறையினர் மேற்கொண்டிருந்தனர். இதனை ஒட்டியே, ஜவாஹிருல்லா, சீமான் உள்ளீட்ட எதிர்ப்பாளர்களும் கைது செய்யப் பட்டனர்.
இருப்பினும், ரத யாத்திரைக்கு எதிர்ப்பு கிளப்பிய அரசியல் இயக்கங்களின் தூண்டுதலால் பல இடங்களில் வகுப்பு ரீதியாக மோதலை உருவாக்கும் வகையில் குறிப்பிட்ட மத வழிபாட்டு இடங்களின் முன்னிருந்து எதிர்ப்பு கோஷங்களை சிலர் எழுப்பினர். இதனாலும் பதற்றம் எழுந்தது.
இந்தப் பின்னணியில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்டார். இந்த 144 தடை உத்தரவு என்பது, ராம ராஜ்ய ரத யாத்திரையில் வருபவர்களுக்குக் கிடையாதா என்று! அந்தக் கேள்விக்கான பதிலை, இன்று காலை வழக்குகள் மூலமும் வாகனங்களைப் பறிமுதல் செய்ததன் மூலமும் நெல்லை காவல்துறை அளித்துள்ளது.