சாலைத் தடுப்புன்னு இல்லாம சுவரே கட்டிட்டாய்ங்கய்யா..! எல்லாம் கொரோனா படுத்தும் பாடுதான்!

இந்தியா தமிழகம் லைஃப் ஸ்டைல்
road blocked in ap border
road blocked in ap border

கொரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், பல இடங்களில் சாலைகள் மறிக்கப் பட்டுள்ளன. சில இடங்களில் குறுக்கே தட்டிகள் வைத்தும் கம்புகள் கட்டியும் சாலைகள், வீதிகளில் மக்கள் நடமாட்டத்தை தடை செய்கிறார்கள். ஆனால் ஆந்திர எல்லையில் பளாக் கற்கள் கொண்டு, சிமிண்டு போட்டு அப்படியே சாலையை மூடி சுவரே எழுப்பி விட்டார்கள்.

கோவிட் -19 லாக் டவுனுக்கு மத்தியில் வாகன இயக்கத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கில், வேலூர் மாவட்டத்தில் இரண்டு முக்கிய நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் தமிழ்நாடு-ஆந்திர மாநில எல்லைச் சாலைகளில் சுவர்கள் எழுப்பப்பட்டுள்ளன.

சைன்குண்டா மற்றும் பொன்னை (மாதண்டகுப்பம்) சோதனைச் சாவடிகளில் சுவர்களுக்கான கட்டுமானப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது, மாவட்ட ஆட்சியர் ஏ சண்முக சுந்தரம் அதற்கான உத்தரவுகளை பிறப்பித்தாராம்.

இந்தச் சுவர்கள் மூன்று அடி உயரம் வரை கட்டப் பட்டிருந்தன! இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் இந்த இரண்டு சிறிய எல்லை சோதனைச் சாவடிகள் வழியாக வேலூருக்குள் நுழைய அனுமதிக்கப்படாது.

இருப்பினும், பத்தலப்பள்ளி, பரதராமி, கிறிஸ்டியன் பேட் மற்றும் சேர்க்காடு ஆகிய இடங்களில் உள்ள மற்ற நான்கு எல்லை சோதனைச் சாவடிகள் திறந்து வைக்கப் பட்டுள்ளன.

ஆட்சியர் சண்முக சுந்தரம், சைணகுண்டா சோதனைச் சாவடியை நோக்கிச் செல்லும் வாகனங்கள் பரதராமி சோதனைச் சாவடி வழியாக மாற்றப்படும் என்றும், பொன்னை சோதனைச் சாவடிக்குள் நுழைய வரும் வாகனங்கள் கிறிஸ்டியன் பேட் அல்லது சேர்க்காடு வழியாக மாற்றப்படும் என்றும் கூறினார்.

வேலூருக்குத் திரும்புபவர்கள் பத்தலப்பள்ளி, பரதராமி, கிறிஸ்டியன் பேட், மற்றும் சேர்க்காடு சோதனைச் சாவடிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களில் சுகாதார பரிசோதனை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அவர்களின் சோதனை முடிவுகள் வரும் வரை அவர்கள் தனிமைப்படுத்தல்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

சேர்க்காடு உயர்நிலைப்பள்ளி, சன்பீம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பரதராமியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, பத்தலப்பள்ளியில் உள்ள அரசு சிறுவர்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தனிமைப்படுத்தலுக்கான இடங்கள்.

இதற்கிடையில், பூத்துத்துக்கு வழியாக வேலூருக்குள் நுழைவோர் அலமேலுமங்காபுரம் அருகே உள்ள கே.ஜி.என் திருமண மண்டபத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று கூறப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.