ஒருவர் கொலை வெறியுடன் தாக்க வந்தால் என்ன செய்வீர்கள்: எடப்பாடியின் டிவிட்டுக்கு சர்ச்சை அர்ச்சனைகள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்

edappaditweet - 2026

ஒருவர் உங்களைத் தாக்க வரும்போது, நீங்கள் இயல்பாகவே உங்களைக் காத்துக் கொள்ள விழைவீர்கள். அதுபோன்ற சூழ்நிலைகளில் எவருமே முன்கூட்டியே திட்டமிட்ட ரீதியில் செயல்படமாட்டார்கள்… என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

இப்படி ஒரு டிவிட்டர் பதிவை அவர் ஆங்கிலத்தில் போட்டாலும் போட்டார்… அந்த டிவிட்டின் பின்னணியில் மிக மோசமான வார்த்தைகளால் கொன்று எடுக்கிறார்கள் பின்னூட்டம் போடுபவர்கள். வசைச் சொற்களால் அட்மினுக்கு காய்த்து எடுக்கும் சிலர், அட்மின் மூலம் ஆங்கிலத்தில் பதிவு செய்தால் அப்படியே விட்டுவிடுவோமா என்று கேள்வி கேட்கின்றனர்.

செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறியதும், அப்போது போலீஸார் போராட்டக்காரர்களைப் பார்த்து வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டதும் தூத்துக்குடி நகரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகத்தையும் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.

கலவரக் காரர்கள் வரம்பு மீறி போலீஸார் மீது கல்லெறிந்து, கொலை செய்யும் நோக்கோடு திட்டமிட்டு தாக்கினர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஸ்டெர்லைட் குடியிருப்பு ஆகியவற்றில் இருந்த மக்களின் உயிருக்கும் உடமைக்கும் தீங்கிழைத்த முயன்றனர் என்பதால்தான் துப்பாக்கிச் சூடு நடந்தது என்று ஒரு தரப்பு கூறுகிறது.

போலீஸார் வரம்பு மீறி, குறிபார்த்து சுட்டனர் என்றும் சக மக்களை மக்களாகப் பார்க்காமல் குருவியைச் சுடுவது போல் சுட்டுத் தள்ளினர் என்றும் கோபத்தில் கொந்தளிக்கிறார்கள் தூத்துக்குடி மக்களில் பலர்.

இந்த நிலையில்,போலீஸாரின் நிலைப்பாட்டை விளக்குவது போல், முதல்வர் பழனிச்சாமியின் இந்த டிவிட் பார்க்கப் படுகிறது.

ஸ்டெர்லைட் பிரச்னை சில அரசியல் கட்சிகளாலும், தலைவர்களாலும் தவறாக வழிநடத்தப் படுகிறது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை மதித்தே மாநில அரசு செயல்படுகிறது என்றும், எதிர்க்கட்சியினர் அப்பாவி மக்களை போராடத் தூண்டிவிட்டு வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், போராட்டக் காரர்களுடன் 14 முறை பேச்சு வார்த்தை நடத்தி அரசின் நிலையை எடுத்துக் கூறியுள்ளது என்றும், தமிழ்நாடு மாசுக் கட்டுப் பாட்டு வாரியம் ஸ்டெர்லைட்க்கான உரிமத்தை புதுப்பிக்கவில்லை என்றும் கூறியுள்ளதாக எடப்பாடி குறிப்பிட்டுள்ளார்.

மே 22 ஆம் தேதி சமூக விரோதிகள் இந்தப் போராட்டக் குழுவில் ஊடுருவி, போலீஸாரை தாக்கி, வண்டிகளை தீவைத்துக் கொளுத்தி, வன்முறையில் ஈடுபட்டனர் என்றும், போலீஸார் வேறு வழியின்றி துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டியதாயிற்று என்றும், இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒன்று அல்ல என்றும் கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

சட்ட ரீதியாக ஸ்டெர்லைட்டை மூடும் முயற்சியை மாநில அரசு மேற்கொள்ளும் என்று கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.