போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தலைமைச் செயலர் உத்தரவு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
teachers strike - 2026

போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ ஜியோ – ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

25 ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்புமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளிகள் எந்தத் தடையும் இன்றி செயல்பட போதுமான நடவடிக்கையை எடுக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடவேண்டும்; ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவது வேதனை அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அரசுக்கு நிதி பிரச்னை உள்ளது, அரசுக்கு 100 ரூபாய் வருவாய் வந்தால் 75 ரூபாய் சம்பலத்திற்கே சரியாகப் போய் விடுகிறது; மீதி உள்ள வருவாயில் தான் லைட் போடுவது, சாலைகள் அமைப்பது போன்ற நல திட்டங்களை செயல்படுத்த வேண்டியுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் கொடுத்துள்ளார்.

இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை கைது செய்வது தவறான முன்னுதாரணம் என்று, ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மாயவன் கூறியுள்ளார். 28-ம் தேதி அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப் படும் என்றும், உயர் நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் மாயவன் கூறியுள்ளார்.

இந்நிலையில், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக மாவட்ட அளவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இணை இயக்குநர்கள் பொறுப்பாளராக நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

குடியரசு தின விழாவை ஆசிரியர்கள் புறக்கணிக்கக் கூடாது; உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிக்கை கொடுத்துள்ளார். நாளை பணிக்கு வராவிட்டால் நோட்டீஸ் வழங்கப்பட்டு அந்த பணியிடத்தில் தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்படுவார் என்று முதன்மைக் கல்வி அலுவலர் கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.