அரிவாளைக் கண்டும் பயம் இல்லை… கொள்ளையரை அடித்து விரட்டிய மூதாட்டி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்

nellai robbery - 2026

கொள்ளை அடிக்க வந்த இருவரின் கைகளில் இருந்த அரிவாள், கத்தியைக் கண்டும் எந்த வித அச்சமும் இல்லாமல், கொள்ளையர்களை முதிய தம்பதியர் தாக்கி ஓட ஓட விரட்டிய சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 78) அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸ் ஆலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 4 ஏக்கரில் எலுமிச்சை தோட்டம் அமைத்துள்ளார். தோட்ட வளாகத்தில் வீடு கட்டி மனைவி செந்தாமரை (வயது 70) உடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் சண்முகவேல் வீட்டு முற்றத்தில் சேரில் அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்போது, சண்முகவேலின் பின்னால் வந்த ஒரு கொள்ளையன், மெதுவாக வந்து, அவர் அறியாத வண்ணம் பின்புறத்தில் இருந்து கொண்டு ஒரு துண்டால் சண்முகவேலின் கழுத்தில் சுற்றி, அவரைக் கொலை செய்ய முயற்சி செய்தான்.

ஆனால் அந்தக் கொள்ளையனை மீறி, திமிறி திமிறி அவர் அவன் பிடியில் இருந்து விடுபட்டார். அதே நேரம் அவரது சத்தம் கேட்டு, வீட்டுக்குள் இருந்து அவர் மனைவி செந்தாமரை ஓடிவந்தார்.

அப்போது முகமூடி அணிந்த இன்னொரு கொள்ளையன் ஓடிவந்து, அவரைத் தாக்க முயன்றான். ஆனால் செந்தாமரை, பலம் கொண்ட மட்டும் வீட்டில் அருகில் இருந்த பொருள்களை எடுத்து அவர்கள் மீது எறிந்துள்ளார்.

இருவரும் முகமூடி அணி்ந்திருந்து, கைகளில் அரிவாள் கத்தி என வைத்திருந்தனர். ஆனால் அந்த அரிவாளைக் கண்டு அவர் அச்சம் கொள்ளவில்லை. தொடர்ந்து தாக்கினர். இதனால் ஒரு கட்டத்தில் கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆயினும், ஒருவன் செந்தாமரையின் கழுத்தில் இருந்த 35 கிராம் தங்க செயினை பறித்துக்கொண்டு ஓடினான். செந்தாமரையின் கையிலும் லேசாக அரிவாளால் வெட்டிவிட்டு இருவரும் தப்பியோடினர்.

போலீஸாரின் விசாரணையில் கொள்ளையர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது. குற்றவாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.