அமைச்சரின் கல்லூரியில் மாணவர்கள் போராட்டம் – வகுப்பு அறை சூறை : மேலும் 2 மாணவர் தற்கொலை

Reporters Diary

ஆந்திர மாநில உள்ளாட்சி துறை அமைச்சராக இருப்பவர் நாராயணன். சந்திரபாபு நாயுடுவின் நண்பரான இவர் தேர்தலில் போட்டியிடாமல் அமைச்சர் ஆனார். பின்னர் எம்.எல்.சி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார்.

அமைச்சர் நாராயணனுக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளது. இங்கு மாணவர்களை தேர்ச்சி பெற கடுமையான பயிற்சி அளிக்கப்படுவதாகவும், அதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதாகவும் புகார்கள் எழுப்பப்பட்டு வருகிறது.

இதுவரை 11 மாணவ– மாணவிகள் தற்கொலை செய்து இருப்பதாகவும், சந்திரபாபு நாயுடுவின் நண்பர் நிறுவனம் என்பதால் அதன் மீது அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இந்த கல்வி நிறுவனத்தில் படித்த 2 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கர்னூல் மாவட்டம் நன்னூரில் உள்ள நாராயணா ஜூனியர் கல்லூரியில் ஸ்ரீகாந்த் என்ற மாணவன் விடுதியில் தங்கி பிளஸ்–1 படித்து வந்தான்.

கணித தேர்வில் தோல்வி அடைந்த இவன் மீண்டும் தேர்வு எழுதி வெற்றி பெற்றான். ஆனாலும் அவன் அவமரியாதையாக நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் விரக்தி அடைந்த ஸ்ரீகாந்த் விடுதி அறையில் தூக்கில் தொங்கினார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவனை சக மாணவர்கள் கர்னூல் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனான்.

இதனால் ஆவேசம் அடைந்த மாணவர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சில மாணவர்கள் பள்ளிக்குள் புகந்து கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். மேஜை நாற்காலிகளை உடைத்து சூறையாடினார்கள்.

இதே போல் விஜயவாடாவில் உள்ள நிடமானூர் நாராயணா கல்லூரியில் பிரகாசம் மாவட்டம் வெந்தவாரி பேட்டையை சேர்ந்த பிளஸ்–1 மாணவன் அகில் பேஜ்குமார் ரெட்டி விடுதியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆத்திரம் அடைந்த மாணவர்கள் அகில் உடல் வைக்கப்பட்டு இருந்த சாமினேனி தனியார் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.