பெண் டி.எஸ்.பி தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் தலைமறைவு

Reporters Diary

நாமக்கல் மாவட்டம்திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் சிக்கிய கோயில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவன் தலைமறைவாக உள்ளார்.

தற்கொலை செய்து கொண்ட டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவிடம் அலைபேசியில் பேசிய திருக்கோஷ்டியூர் கோயில் ஊழியர் விஜயராகவன், சி.பி.சி.ஐ.டி., விசாரணை வளையத்திற்குள் சிக்கி உள்ளார் .

சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக அடிக்கடி டி.எஸ்.பி. சென்றுள்ளார். அப்போது கோயிலில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவனிடம், 29, நட்பு ஏற்பட்டுள்ளது. அவர் திருப்புத்துாரில் ‘பிராக்டிக்கல் டிரெய்னிங்’ பணியில் அப்போது இருந்துள்ளார். திருச்செங்கோடு சென்ற பின்னும் அலைபேசியில் அடிக்கடி விஷ்ணுபிரியாவிடம் பேசியதாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது.

இந்நிலையில் சில நாட்களாக விஜயராகவன் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. நான்கு நாட்களாக கோயில் பணிக்கும் செல்லவில்லை.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் கூறியதாவது:
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியாவுடன் அடிக்கடி விஜயராகவன் பேசியது தெரிந்துள்ளது. இதையடுத்து அவர் பற்றி விசாரித்தோம். கடந்த 4 நாளுக்கு முன் அவர் காணாமல் போயிருப்பது தெரிந்தது. விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி., போலீசார் அழைத்து சென்றிருக்கலாம். தற்போது அவரின் அலைபேசியும் ‘சுவிட்ச் ஆப்’ -ல் உள்ளது. போலீசார் தேடி வருவது தெரிந்து தலைமறைவு ஆனாரா.? என தெரியவில்லை. அவரது குடும்பத்தாரிடம் கேட்ட போது, ‘நான்கு நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் காணவில்லை. எங்களிடமும் தகவல் சொல்லவில்லை’ என தெரிவித்து விட்டனர் என்றனர் சி.பி.சி.ஐ.டி போலீசார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.