மத்திய அமைச்சர்களை மாற்ற பிரதமர் மோடி திட்டம்

Reporters Diary

 

பாரதீய ஜனதா அரசு கடந்த ஆண்டு மே மாதம் 26–ந்தேதி மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசை அமைத்தது.மோடி மந்திரி சபையில் மிக குறைவான அமைச்சர்களே இடம் பெற்றுள்ளனர். சில மூத்த அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்களை கவனித்து வருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தன் அமைச்சர்களை அழைத்து பேசி, அவர்களது துறையின் திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கடந்த 16 மாதங்களில் அனைத்து துறை செயல் பாடுகளையும் அவர் மேம்படுத்தி வருகிறார்.இந்த நிலையில் சில துறைகளில் அமைச்சர்கள் செயல்பாடு, பிரதமர் மோடிக்கு அதிருப்தியைக் கொடுத்துள்ளது. சில துறைகளை வேறு அமைச்சர்களுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

மூத்தஅமைச்சர்ககளில் அருண்ஜெட்லி, வெங்கய்யா நாயுடு, ரவிசங்கர் பிரசாத் உள்பட சில அமைச்சர்களிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட இலாகாக்கள் உள்ளதால் சில துறைகளின் நிர்வாகத்தில் தாமதம் ஏற்படுகிறது. எனவே நிதி, வெளியுறவுத்துறை, பாதுகாப்பு ஆகிய இலாகாக்களை வேறு இலாகாகளுடன் சேர்க்காமல் தனியாக நிர்வகிக்க பிரதமர் மோடி ஆலோசித்து வருகிறார்.

அதற்கு வசதியாக மத்திய மந்திரிசபையில் மாற்றம் ஏற்படுத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் மந்திரிகளின் செயல்பாடுகளை மேலும் ஆய்வு செய்யத் தொடங்கி உள்ளார்.அந்த ஆய்வுப்படி மந்திரிகளின் திறமைக்கு ஏற்ப பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. அதை அடிப்படையாக வைத்து மத்திய மந்திரி சபையில் பிரதமர் மோடி மாற்றம் செய்வார் என்று தெரிகிறது.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் முடிவு நவம்பர் மாதம் 8–ந்தேதி வெளியாக உள்ளது. தீபாவளி சமயத்தில் பீகார் சட்டசபை தேர்தல் நடவடிக்கை அனைத்தும் முடிந்து விடும்.அதன் பிறகு மத்திய மந்திரி சபையை பிரதமர் மோடி மாற்றி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை டிசம்பர் மாதம் மந்திரிசபையை மாற்ற இயலாவிட்டால் ஜனவரி முதல் வாரம் மத்திய அமைச்சர்கள் சபை உறுதியாக மாற்றி அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு மத்திய பட்ஜெட் கூட்டத் தொடரை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்ற வகையில் மந்திரி சபை மாற்றம் இருக்கும் என்று டெல்லி வட்டாரத்தில் பேசப்படுகிறது.மந்திரிசபை மாற்றத்தின் போது, திறமையான அமைச்சர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்களுக்கு முக்கிய இலாகாக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. இலாகாக்கள் பிரிக்கப்படுவதால் 4 அல்லது 5 புதிய கேபினட் அந்தஸ்து அமைச்சர்கள் கூடுதலாக மந்திரி சபையில் இடம் பிடிப்பார்கள்.

குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். இதனால் பா.ஜ.க.வில் உள்ள இளம் எம்.பி.க்களிடம் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.ராஜாங்க அமைச்சர்கள் கூடுதலாக வாய்ப்புள்ளது. இந்த மந்திரி பதவிகள் இதுவரை பிரதிநிதித்துவம் பெறாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

அதுபோல பா.ஜ.க. கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம், சிவசேனா கட்சிகளுக்கும் கூடுதல் மந்திரி பதவி கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.