தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, தடையில்லா மின்சாரம், : தமிழ் மாநில காங்கிரஸ்

Reporters Diary

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் வந்த அவர் பல்வேறு பகுதிக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார்.

தூத்துக்குடி தாளமுத்துநகரில் நடந்த பொதுக் கூட்டத்தில் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசியதாவது:–

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வது வாடிக்கையாக இருக்கிறது. வளைகுடா போன்ற குறுகிய எல்லை பகுதியில் தமிழக மீனவர்கள் செல்வது தவிர்க்க முடியாது. அதனால் வளைகுடா பகுதியை பொது எல்லையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். ஆழ்கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக சட்ட மன்றத்தில் அறிவிக்கப்படும் என பொது மக்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. தமிழகத்தில் படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதற்கு அரசு வழி செய்ய வேண்டும். ஐ.நா.சபையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சேது சமுத்திர திட்டம் நிறைவேறாமல் போனதற்கு யார் காரணம்? என்று அனைவருக்கும் தெரியும். பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் சேது சமுத்திர திட்டத்துக்கான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் சேது சமுத்திர திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

அகில இந்திய அளவில் லாரி உரிமையாளர்கள் வருகிற 1–ந்தேதி முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளனர். இதனால் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும். அதற்கு மத்திய அரசு இடம் கொடுக்கக்கூடாது.

எனது சுற்றுப்பயணம் மக்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. என்னுடைய 2–ம் கட்ட சுற்றுப்பயணம் வருகிற பிப்ரவரி மாதம் நிறைவடைகிறது. அதன் பிறகு மக்களின் மன நிலைக்கு ஏற்றவாறு வருகிற சட்டசபை தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைப்போம் என த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.