கண்ணீர் மல்க சாப்பாட்டுக்கு உதவி செய்ய ஆட்சியரிடம் மனு கொடுத்த சிறுவர்கள்

Reporters Diary

 

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் பற்றிய மனுக்களை கொடுத்தனர்.

ஈரோடு வி.சி.சி.ஆர். நகரை சேர்ந்த மாநகராட்சி ஊழியர் செந்தில்குமாரின் 2 குழந்தைகள் கலெக்டரிடம் மனு கொடுக்க புறப்பட்டனர். மகள் சவுமியா (வயது 14) 9–ம் வகுப்பு படிக்கிறாள். இவரது தம்பி தனுஷ் 6–ம் வகுப்பு படிக்கிறான்.

அக்கா–தம்பியான இவர்கள் வீட்டை விட்டு புறப்பட்டு ஒரு ஆட்டோவில் ஏறினர். ஆட்டோ டிரைவரிடம், ‘‘அண்ணா கலெக்டர் ஆபீசுக்கு போகனும் எங்கப்பா குடிச்சிட்டு வர்ரார், சாப்பாட்டுக்கு பணம் கொடுப்பது கிடையாது. இப்பகூட பசியில்தான் இருக்கோம்’’ என்று வேதனையுடன் கூறினர்.

இதைகேட்டு கண்கலங்கிய அந்த ஆட்டோ டிரைவர் 2 குழந்தைகளுக்கும் ‘‘சமோசா’’ வாங்கி கொடுத்து பசியாற்றினார். பிறகு அவர்களை ஆட்டோவில் ஏற்றி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொண்டு விட்டார்.

பிறகு அந்த சிறுவர்கள் நேராக குறைகள் கேட்டுக்கொண்டும், மனுக்கள் வாங்கி கொண்டிருந்த கலெக்டர் பிரபாகரிடம் கையில் மனுவுடன் சென்றனர்.

ஆட்சியர் அலுவலகம் உள்ளே வேதனை கலந்த முகத்துடன் 2 சிறுவர்கள் வருவதை கண்ட க ஆட்சியர்அலுவலக ஊழியர்கள் மிரட்சியுடன் இருந்தனர். கலெக்டரும் அந்த சிறுவர்களை பார்த்து ‘‘உங்களுக்கு என்ன குறை… ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருக்கீங்க?’’ என்று பரிவுடன் கேட்டார்.

உடனே அந்த சிறுவர்கள் தாங்கள் எழுதி கொண்டு வந்த மனுவை ஆட்சியரிடம் கொடுத்தனர்.

அந்த மனுவில், ‘‘நாங்க வி.சி.சி.ஆர். நகரிலிருந்து வருகிறோம். எங்கப்பா பெயர் செந்தில்குமார், அம்மா சாந்தி, அவங்களுக்கு உடம்பு சரியில்ல.. எங்கப்பா மாநகராட்சியில் வேலை பார்க்கிறார். அப்பா வீட்டுக்கு எப்போதாவதுதான் வருவார் வரும்போது குடி போதையில் வருவார். சாப்பாட்டுக்கு சரியா பணம் கொடுப்பது கிடையாது.

இதனால் பல நாட்கள் நாங்க பட்டினியா கிடக்கிறோம். எங்களுக்கு சாப்பாட்டுக்கு ஏதாவது உதவி செய்யுங்க…’’ என்று எழுதப்பட்டிருந்தது.

சிறுவர்களின் இந்த உருக்கமான கடிதத்தை படித்ததும் ஆட்சியர் பிரபாகர் உடனடியாக சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்து ‘‘இந்த சிறுவர்களின் மனு மீது நடவடிக்கை எடுங்கள்’’ என உத்தரவிட்டார்.

சமூக நலத்துறை அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். சிறுவர்களின் தந்தை செந்தில்குமாரை வரச்சொல்லி சமூகநலத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்த உள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.