நிழல் போலீஸும் நிஜ போலீஸும்! ‘சவுண்டு’ விட்ட விஷால்; அடங்கச் செய்த அரவிந்தன்!

Reporters Diary உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சினி நியூஸ் சென்னை லைஃப் ஸ்டைல்
aravindan ips - 2026

சென்னை: சினிமாவில் மாஸ் காட்டி, சுத்தோ சுத்து என்று கையைக் காலை சுத்தி… அதிர அடிச்சா அரை டன்னு… பாக்குறியா பாக்குறியா என்ற வசனங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் எடுபடாது என்பதை விஷால் புரிந்து கொண்டிருப்பார்! காரணம், விஷாலுக்கு வைத்த ட்ரீட்மெண்ட் அப்படி!

தி.நகர் ராகவைய்யா சாலையில் லோகாம்பாள் தெருவில்தான் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்துக்கு விஷாலின் எதிர்ப்பாளர்கள் சிலர் பூட்டு போட, திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் உட்கட்சி சண்டை தெருவுக்கு வந்துவிட்டது. விஷாலோ, அடாவடியாக பூட்டை திறக்க மாட்டேன், உடைப்பேன் என்று எகிறினார்! கடுமையாக வாதிட்டு தகராறு செய்தார். கடைசியில் ஒரு போலீஸ் அதிகாரியிடம் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போனார். அந்த அதிகாரி, தி.நகர் துணை ஆணையர் அரவிந்தன்.

aravindan vishal karunas1 - 2026

முன்னர் நெல்லை மாவட்டம் தென்காசியில் ஏடிஎஸ்பி.,யாக இருந்தவர் அரவிந்தன். சினிமாவில் காட்டும் விரைப்பான காக்கிச் சட்டை போட்டு தெருவில் இறங்கி சண்டை போடும் வெள்ளித்திரை போலீஸ் ரகம் இல்லை! இவர், நிஜ போலீஸ்! பொறுமையாக பிரச்னைகளை அணுகக் கூடியவர்; அதே நேரம் கறார் பேர்வழி என்று தென்காசியில் பெயர் வாங்கியவர்.

தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போடப்பட்டது தொடர்பாக ஏற்கெனவே போலீசார் விஷாலுக்கு அறிவுறுத்தினர். ஆனால், அவர் அந்தப் பேச்சை கேட்கவே இல்லை. தொடர்ந்து தகராறு செய்தார். அந்த நேரம், எங்கள் அதிகாரி வரட்டும், பொறுமையாக இருங்கள் என்று போலீஸார் சொல்ல, அப்போதும் விஷால் சத்தம் போட்டுக் கொண்டேதான் இருந்தார். தேர்தல் களத்தில் குதித்து சூடு போட்டுக் கொண்டதால், இப்போது அவருக்கு அரசியல்வாதி நினைப்பு வந்துவிட்டது போலும்!

அந்த நேரம் தகவல் அறிந்து அங்கே வந்தார் அரவிந்தன். வழக்கம் போல், விஷாலிடம் பொறுமையாக பேசினார். எதா இருந்தாலும் சரி… எங்க ஆபீஸ்க்கு வாங்க.. உட்கார்ந்து பொறுமையா பேசுவோம். தெருவில் இப்படி திரண்டு நின்று பேசவேண்டாம் என்று சொல்லிப் பார்த்தார்.

ஆனால் விஷால் விடவில்லை. மேலும் மேலும் எகிறினார். ஒரு கட்டத்தில் தொடர்ந்து சட்ட விரோதமாக செயல்பட்டால் கைது செய்ய வேண்டி வரும் என்றார் அரவிந்தன். சினிமா போலீஸில் இயக்குனர் சொல்லிக் கொடுத்த ஸ்டண்ட் நினைவுக்கு வந்ததோ என்னவோ, அவராகவே ஆவேசமாக கத்திக் கொண்டே போய் போலீஸ் வேனில் ஏறி அமர்ந்து கொண்டார். இதை அடுத்து, அவரை கைது செய்வதாக காவல்துறை அதிகாரி அரவிந்தன் கூறினார்.

இதை அடுத்து, விஷாலின் அணுக்கத் தொண்டர்கள் ஆவேசமானார்கள். கைது செய்ததில் சதி என்றார்கள். வேண்டுமென்றே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்றார்கள். விஷால் என்ற அரசியல்வாதி களம் காண்பதற்கான தொடக்கப் பணிகளை மேற்கொண்டார்கள். ஆனாலும், சினிமாத்தன டயலாக்குகளை எல்லாம், வீரவசனங்களை எல்லாம் நிஜத்தில் ஒரு இயக்குனர் சொல்லிக் கொடுக்காமல் தானாகப் பேசக் கூடாது என்பதை விஷாலுக்குப் புரியவைத்தார் அரவிந்தன்.

vishal - 2026

ஓர் அதிகாரிக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை சினிமா பார்க்கும் நாலு பேருக்குத் தெரிந்த நடிகன் என்ற காரணத்துக்காக கொடுக்காமல் மிதப்பில் இருப்பது தவறு என்பதை, நடிகர் கருணாஸ் இதே அதிகாரி அரவிந்தனைப் பற்றி மேடையில் பேசி கொஞ்சம் லேட்டாகப் புரிந்து கொண்டார்.

“நான் யார் தெரியுமா? என்னை என்ன செய்து விடுவாய்? கைய வெட்டுறேன் கால வெட்டுறேன்னு இறங்குவியா? எங்களுக்கு கை இல்லியா! இந்த அதிகாரம் இருப்பதால் தானே ஆட்டம்?.. யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா… ஒத்தைக்கு ஒத்தை பார்க்கலாம். தமிழ் படிச்சி ஐபிஎஸ் ஆன ஒரே காரணத்துக்காகத்தான் விட்டு வெச்சிருக்கேன்…” என்றெல்லாம் பேசிய கருணாஸ் என்ன பாடு பட்டார் என்பதை திரையுலகம் கண்டு கொண்டது. இப்போது விஷாலின் ‘டர்ன்’!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.