Home Blog Page 5432

நத்தம் விஸ்வநாதன் மீது வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

திருச்சி:
திருச்சியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னிடம் சூரிய மின்சக்தித் திட்டத்தில் அனுமதி வழங்க ரூ.50 லட்சம் பெற்று மோசடி செய்ததாக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி குற்றவியல் நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக திருச்சி கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.

 

மகாராஷ்டிர முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து: உயிர் தப்பினார் பட்நவிஸ்

மும்பை:

மகாராஷ்டிர முதல்வர் பட்நவீஸ் மற்றும் அதிகாரிகள் குழு சென்ற ஹெலிகாப்டர், இன்று காலை லாத்தூர் என்ற இடத்தில் குடியிருப்புப் பகுதியில் அவசரமாகத் தரையிறங்கும் போது மோதி நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் முதல்வர் மற்றும் அதிகாரிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இது தொடர்பாக பட்நாவீஸ் டுவிட்டரில் தெரிவித்தபோது, லாத்தூரில் நாங்கள் சென்ற ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. நானும் எனது குழுவினரும் பத்திரமாக உள்ளோம். பயப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார்.

5 புதிய வருவாய் வட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்

முதல்வர் பழனிசாமி 5 புதிய வருவாய் வட்டங்களை தொடங்கி வைத்துள்ளார்.

சிங்கம்புணரி, ஸ்ரீமுஷ்ணம், ஆண்டிமடம், கூத்தாநல்லூர், கயத்தாறு ஆகிய ஊர்களை புதிய வருவாய் வட்டங்களாக முதல்வர் தொடங்கிவைத்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு புதிய வட்டம்,

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தினைப் பிரித்து ஆண்டிமடத்தில் ஒரு புதிய வட்டம்,

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூரில் ஒரு புதிய வட்டம்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களை சீரமைத்து கயத்தாரில் ஒரு புதிய வட்டம்,

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தினைப் பிரித்து சிங்கம்புணரியில் ஒரு புதிய வட்டம் என மொத்தம் 5 புதிய வட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக விஷயத்தில் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்: மு.க.ஸ்டாலின்

சென்னை :

சென்னை பள்ளிகரணையில் திமுக சார்பில் குளம் தூர்வாரும் பணியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று (மே 25) பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். அப்போது,

எனது வேண்டுகோளை ஏற்று, குளங்களை தூர்வாரும் பணிகளை திமுக எம்எல்ஏக்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் திமுக சார்பில் குளங்கள் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. குளங்கள் தூர்வாரப்படுவதற்கு அந்தந்த பகுதி மக்கள் ஆதரவும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.

மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை குறைப்பதற்காகவே தூர்வாரும் பணியை செய்து வருகிறோம். ஆனால் திமுக.,வுக்கு புகழ் வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் சில அரசியல் கட்சிகள் இதனை விமர்சித்து வருகின்றன.

முதல்வர் பழனிச்சாமி, பிரதமர் மோடி இடையேயான சந்திப்பு அரசியல் ரீதியிலானது தான்.

அதிமுக.,வை உடைப்பதற்கும், உடைந்திருக்கும் அதிமுக.,வை ஒன்றாக இணைப்பதற்கும் கட்டப் பஞ்சாயத்து செய்வது போல் பிரதமர் மோடி செயல்பட்டு வருகிறார்.

சட்டப்பேரவையில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க பிரதமர் தேதி கொடுத்து, விழா உறுதியான பிறகு கருத்து தெரிவிப்பேன்

இவ்வாறு அவர் பேசினார்.

 

ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 8)

வரதன் வந்த கதை ( பகுதி – 8 )

வசிட்டன் சொன்ன காரணம் கேட்டு நான்முகன் செய்வதறியாது திகைத்தான்..

வேள்விக்காக நகரத்தைத் தயார் செய்து, அலங்கரித்து , அனைவருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு யாவும் தயார் என்ற நிலையில், பிரமன் வாடிப்போகுமளவிற்கு அப்படி வசிட்டன் சொன்னது தான் என்ன ;?

ஒரு விஷயத்தைப் பிரமன் அலட்சியப்படுத்தினான் அல்லது பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மறந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும் !

அவ்விஷயம் நினைவிற்கு வரவும் வசிட்டன் , நான்முகனுக்கு அதனை உணர்த்தினார் ..

உணர்த்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் தான் அது ! அதனால் தான் வசிட்டர் சொல்லவும் ( பிரமன் ) திகைப்புக்குள்ளானான் !

இல்லாளுடன் இணைந்தன்றோ வேள்வி செய்ய வேண்டும் ! அவளோ தன்னாற்றின் கரையில் தவமியற்றச் சென்று விட்டாள் !!

ஸஹ தர்ம சாரிணியான ( கணவன் உடனிருந்து , அவன் அறங்களை அநுட்டிக்க உதவுமவள் ) அவளில்லாமல் வேள்வி எப்படி சாத்தியம் ?

இது தான் வசிட்டன் பேசியது !

நான்முகன் சிறிது நேரம் சிந்தித்து விட்டு கூடியிருந்தவர்களிடம் பேசலானான் !

இத்தனை பெரிய வேள்வியை நான் செய்யப் போகிறேன் ! இவ்விஷயம் ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தெரியும் ! கோபமுற்றுத் தவமியற்றச் சென்றிருக்கும் ஸரஸ்வதியும் அறிந்திருப்பாள் !!

எனவே அவளாகவே வரமாட்டாளா ? என்று பிரமன் வினவவும் சபை சலனமற்று இருந்தது !

பிரமனின் தான்மை( ego ) அவளை அழைக்க மறுத்தது ! புரிந்து கொண்டார் வசிட்டர் .. தந்தைக்கு உபதேசம் செய்தார் தநயன்.. தான் ஸரஸ்வதியை , பிரமன் அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லி அழைத்து வர முயல்வதாக உறுதியளித்துப் புறப்பட்டார் !

வசிட்டர் தன்னை நாடி வருகிறார் என்று ஸரஸ்வதி அறிந்திருந்தாளோ என்னவோ ; வரட்டும் வசிட்டன்.. நம் குறைகளைச் சொல்லிடுவோம் என்று காத்திருந்தாள் !

ஆனால் , நன்மைகளை விரும்பிடாத அஸுர வர்க்கத்தினர் ஸரஸ்வதி யாகத்திற்குச் சென்று விடுவளோ என்றஞ்சினர் ! அவள் சென்றிடவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தனர் ! ஆம் ! யாகம் நன்கு நடைபெற்று விட்டால், தேவர்கள் -ரிஷி முனிவர்கள் மற்றும் பிரமன் – ப்ருஹஸ்பதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் .. அது அஸுரர்களான தங்கள் நலனிற்கு உகந்ததல்ல.. எனவே எப்பாடு பட்டேனும் யாகத்தைத் தடுப்பது என்கிற முனைப்பில் ஈடுபட்டிருந்தனர் !!

வசிட்டர் ஸரஸ்வதியை (அழைக்க ) அணுகினார் ! அவளை விழுந்து வணங்கி தான் வந்த காரியத்தை விண்ணப்பித்தார் !

ஊடலால் கலங்கின ஸரஸ்வதி போகலாமா வேண்டாமா என்று சிந்தித்திருந்தவள் , தீர்மானமாக நான் வரமாட்டேன் என்றுரைத்தாள் !

வசிட்டர் எத்தனையோ சொல்லியும் , கெஞ்சியும் கூட அவள் மனம் மாறவில்லை !

தலையைத் தொங்கவிட்ட படி வசிட்டர் பிரமனிடம் வந்து சேர்ந்து நடந்தவற்றை எடுத்துரைத்தார் !

பிரமன் தனது கண்களை உருட்டியபடி, சரி ! அவள் ( ஸரஸ்வதி ) வர மாட்டேன் என்கிறாள்.. வேள்வியோ செய்தே ஆக வேண்டிய ஒன்று !

கவலையில்லை ! ஸாவித்ரீ முதலான மனைவிகளைக் கொண்டு வேள்வியைத் தொடங்கிடுவோம் என்று தீர்மானித்துத் தொடங்கவும் செய்தார் !

ஸரஸ்வதி வரவில்லையென்றால் வேள்வி தடைப்பட்டுப் போகும் என்றெண்ணியிருந்த அஸுரர்கள் ஏமாற்றத்திற்குள்ளாயினர் !

பிரமன் மற்ற மனைவிகளின் துணையோடு யாகத்தினை ஆரம்பிப்பார் என்று அவர்கள் நினைத்தே பார்க்கவில்லை !

ஒன்றும் குறையில்லை.. ஸரஸ்வதியைக் கொண்டே ஏதேனும் க்ருத்ரிமம் செய்வோம் என்று முடிவு செய்து ,கள்ள வேடம் பூண்டு ஸரஸ்வதியை அணுகினர் அஸுரர்கள் ! இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஸரஸ்வதியை மூளைச் சலவை செய்தனர்.. ஸாவித்ரீ முதலான மனைவியர்க்கு முக்யத்துவம் தந்து நான்முகன் உனக்கு அநீதி இழைத்தனன் என்று அவ்வஸுரர்கள் சொல்வதை மெய்யென்றே எண்ணினாள் மங்கைக் கலைவாணியும் ! ஏதேனும் ஒரு உபாயம் செய்து வேள்வியைத் தடுக்க முனைந்தாள் !

அஸுரர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர் ..

சம்பராஸுரனைக் கொண்டு வேள்வியைக் குலைக்கலாம் என்று குதூகலித்தனர் !

சம்பராஸுரன் மிகுந்த சந்தோஷத்துடன் இசைந்தான் ! கண்ணுக்குப் புலனாகாமல் விசித்திரமான வழிமுறையில் வேள்வியைக் குலைக்கத் திட்டமிட்டான் !

அதென்ன விசித்திரமான திட்டம் !! ஆம் !! காரிருள் ( கும்மிருட்டு ) ஒன்றை உண்டாக்கி யாக சாலையில் , ஒரு பொருளும் தெரியாத படிச் செய்தான் !

பொருள்கள் மட்டுமா ?! பிரமனுக்கோ பிறர்க்கோ ஒருவரையொருவர் பார்த்தறிந்து கொள்ள முடியாத நிலை ( இருட்டினால் ) ஏற்பட்டது !!

என்ன செய்வதென்றறியாத நிலையில் , பிரமன் ” மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்ய: பகவான் ஹரி : ” ( பெரிய ஆபத்து ஏற்படும்பொழுது ஸ்ரீஹரியைச் சிந்திக்க வேண்டும் ) என்று சாஸ்த்ரங்கள் சொன்னபடி , இருகரம் குவித்து இறைவனை இறைஞ்சினான் !!

ஆபத் ஸகன் ஆயிற்றே பகவான் ! வாராதிருப்பானோ ?!

அப்பொழுது வார்த்தைகளால் வருணிக்கமுடியாத ஒரு பேரொளி தோன்றியது .. ஒளி தோன்றிடவும், அச்சத்தை உண்டு பண்ணின இருட்டு விலகத் தொடங்கியது !!

ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்ற பிரமன் மெதுவாகத் தன்னை ஆச்வாஸபடுத்திக் கொண்டு , அழுத்தமாக ,அனைவருக்கும் கேட்கும்படியாக ஒரு சொல்லினை உச்சரித்தான் !!

“தீபப்ரகாசன் ” என்பதே அது !!

யார் அவன்..

விரைவில் …

எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

“மாங்கல்யம் காத்த மகாபெரியவா”


“வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது
எனக்கு அந்தத் தகுதி இல்லை”-அலறிய பெண்மணி

“பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட
ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்”–பெரியவா

(
​ பலமுறை வெவ்வேறு
ஆசிரியர்களால் போஸ்ட் செய்யப்பட்ட அற்புத கட்டுரை)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி-இன்று வெளிவந்த குமுதம் லைஃப்
(31-05-2017 தேதியிட்ட-இதழ்)

கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு முன்னால ஒரு
வெள்ளிக்கிழமை அன்னிக்கு ஸ்ரீமடத்துல, சுவாசினி
பூஜைக்கு ஏற்பாடு பண்ணியிருந்தா. பரமாசார்யா
முன்னிலைல நடக்கற பூஜைங்கறதால எல்லா
விஷயங்களையும் பார்த்துப் பார்த்து செஞ்சுண்டு
இருந்தா. எல்லாரும் பரபரப்பா இயங்கிண்டு இருந்த
அந்த சமயத்துல ஒரே ஒரு பொம்மனாட்டி மட்டும்
ரொம்பவே சோர்வா, அசிரத்தையா இருக்கிறமாதிரி
நின்னுண்டு இருந்தா,

முப்பது முப்பத்தஞ்சு வயசுதான் இருக்கும் அவளுக்கு.
அம்பது அறுபது வயசுக்காராளே சுறுசுறுப்பா இயங்கிண்டு
இருக்கறச்சே,அவ அப்படி நின்னது பலருக்கும் ஒரு மாதிரி
இருந்தது. சிலர் அவளைப் பார்த்துட்டு, ” அதோ அவளைப்
பாரு…பூ இல்லாம பொட்டும் வச்சுக்காம..இவளை எல்லாம்
யார் இங்கே வரச் சொன்னா?” அப்படின்னு முணங்கினா.
சிலர், அவளுக்குத் தர பூவும் பொட்டும் எடுத்துண்டு போனா,
ஆனா,அவ அதை கவனிக்காத மாதிரி நாசூக்கா நகர்ந்துண்டா.

பூஜைக்கான ஏற்பாடுகளைவிட அவளைப் பத்தின பேச்சே
கொஞ்சம் அதிகமா இருந்த சமயத்துல அங்கே வந்தார்
பரமாசார்யா. கூட்டம் மொத்தமும் சட்டுனு அமைதியாச்சு.
அருள்ததும்ப வந்து உட்கார்ந்த ஆசார்யா, சுத்துமுத்தும்
ஒருதரம் பார்த்துட்டு, அந்தப் பொம்பளையைக் கூப்பிடச்
சொன்னார்.

பவ்யமா வந்து அவர் முன்னால் நின்னா அந்தப் பொம்பளை,
“சுவாசினி பூஜை நடக்கற இடத்துல நீ மட்டும் இப்படி மூளி
நெத்தியோட இருக்கலாமோ? இந்தா இதை இட்டுக்கோ!”
கை நிறைய குங்குமத்தை எடுத்து நீட்டினார் பரமாசார்யா.

“வேண்டாம் பெரியவா,நான் குங்குமம் இட்டுக்கக் கூடாது!”
என்று அலறி சொன்னவ அதுக்கான காரணத்தையும் சொல்ல
ஆரம்பிச்சா,”என்னோட ஆத்துக்காரர் இந்திய ராணுவத்துல
இருந்தார்.ஆறுமாசத்துக்கு முன்னால எனக்கு மிலிட்டரிலேர்ந்து
ஒரு கடுதாசி வந்தது. பார்டர்ல நடந்த ஒரு சண்டைல அவர்
செத்துப் போயிட்டார்னும்,எதிரிகள்கிட்டே சிக்கிண்டுட்ட
அவரோட உடல்கூட கிடைக்கலைன்னும் அதுல எழுதி இருந்தா!

எனக்கு லோகமே இருண்டுடுத்து.இருந்தாலும் மனசை
திடப்படுத்திண்டு அவருக்கு செய்ய வேண்டிய
கர்மாவையெல்லாம் செஞ்சுண்டேன். அவரோட ஆன்மா சாந்தி
அடைய, நான் இன்னும் அவருக்குச் செய்யவேண்டிய கர்மா
என்னன்னு உங்ககிட்டே கேட்டுத் தெரிஞ்சுக்கதான் இங்கே
வந்தேன்இங்கே வந்தப்புறம்தான் இப்படி ஒரு பூஜை நடக்கிறதே
எனக்குத் தெரிஞ்சுது. இந்த சமயத்துல நான் இங்கே இருக்கிறது
தப்புதான்.மன்னிச்சுடுங்கோ. நான் இன்னொரு நாள் வந்து
கேட்டுக்கிறேன்” கைகூப்பி நமஸ்காரம் பண்ணினா.

சட்டுன்னு சிலவிநாடி கண்ணை மூடிண்டார் பெரியவா.
அதுக்கு அர்த்தம் தெரியாம, அங்கே இருந்த பலரும் அவமேல
பரிதாபப்பட,மெதுவா நடந்து வெளில போகத்தயாரானா,
அந்தப் பெண்மணி.

“ஒன்னை யாரு போகச் சொன்னா? நீ இங்கே தாராளமா
இருக்கலாம். பூஜையிலும் கலந்துக்கலாம்! உன்னோட
ஆம்படையான் உசுரோடுதான் இருக்கார்” பெரியவா குரல்
கேட்டு சட்டுன்னு திரும்பி வந்தவகிட்டே நிறைய
குங்குமத்தை எடுத்துக் குடுத்தார் பரமாசார்யா.

கை நடுங்க, உடல் சிலிர்க்க,கண்ணுல ஜலம் முட்டிண்டு
வழிய, பெருமூச்சு வாங்க அதை வாங்கி நெத்தி நிறைய
இட்டுண்டா அந்தப் பெண்மணி. மகாபெரியவாளே அப்படிச்
சொன்னதுக்கு அப்புறம் அங்கே மறுவார்த்தை எழுமா?
எல்லாருமா அந்தப் பெண்ணிற்கு மஞ்சள், குங்குமம்,
புடைவை, ரவிக்கைத் துணி,திருமாங்கல்யச் சரடு,புஷ்பம்னு
எல்லாம் தந்து பூஜையிலும் கலந்துக்க வைச்சா.

அடுத்த வெள்ளிக்கிழமை மகாபெரியவாளை தரிசனம்
பண்ண வந்தா, அதே பெண்மணி.

“பெரியவா…ஒரேடியா போய்ட்டார்னு நாங்க எல்லாரும்
நினைச்சுண்டு இருந்த என்னோட ஆத்துக்காரர் உங்க
ஆசிர்வாதத்துல, இதோ உசுரோட வந்துட்டார்.
இந்தியாவோட பார்டர்ல காவலுக்கு இருந்த இவர்.
எதிரிகளோட நடந்த சண்டைல குண்டடிபட்டு
விழுந்துட்டாராம்.இவர் செத்துட்டதா நினைச்சு,
இழுத்துண்டுபோய் எங்கேயோ மலைமேல் வீசிட்டுப்
போயிட்டாளாம் எதிரிகள். நம்ம நாட்டு வீரர்கள் ஒரு வாரம்
தேடி அலைஞ்சுட்டு,உடலும் கிடைக்காததால இறந்துட்டதா
தகவல் சொல்லிட்டா.

ஆனா, மலைமேல கிடந்த இவரோட உடல்ல கொஞ்சநஞ்சம்
உசுரு ஒட்டிண்டு இருந்திருக்கு. யாரோ மலைஜாதிக்காரர்
பார்த்துட்டு ஏதோதோ வைத்தியம் பண்ணி பொழைக்க
வைச்சிருக்கா.விழிச்சு எழுந்ததும்,அவாளுக்கு நன்றி
சொல்லிட்டு எப்படியோ தடுமாறி தத்தளிச்சு ஆத்துக்கு
வந்து சேர்ந்துட்டார்.

அன்னிக்கு எனக்குக் குங்குமத்தைக் குடுத்த நீங்கதான்
மலைவாசி ரூபத்தில இருந்து இவரை காப்பாத்தியிருக்கேள்”
தழுதழுப்பா சொன்னா. ஆத்துக்காரரோட சேர்ந்து
ஆசார்யாளுக்கு நமஸ்காரம் பண்ணினா.

மென்மையா புன்னகைச்ச ஆசார்யா,”மலைவாசின்னா யாரு?
சதா மலைவாஸம் பண்ற அந்தப் பரமேஸ்வரன்தான்.
மலைவாசி. அவன்தான் உன் ஆத்துக்காரரை காப்பாத்தி-
யிருக்கான்.அதனால இனிமே உங்களுக்கு எந்தக்கொறையும்
வராது. க்ஷேமமா இருங்கோ!” கை நிறைய குங்குமத்தைக்
குடுத்து ஆசிர்வாதம் பண்ணினார்.

சந்தோஷமா வாங்கி நெத்தி நிறைய இட்டுண்டு,
ஆனந்தமா புறப்பட்டா அந்தத் தம்பதி.

திருவாரூர் ஆழித்தேர் தேதி மாற்றமா?

திருவாரூர் மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் வரும் மே 29/5/17 அன்று திருவாரூரின் சிறப்புமிக்க ஆழித்தேர் நடக்க இருந்த நிலையில் தற்போது தேதியை கோவிலின் நிர்வாகம் மாற்றியுள்ளது என்று கூறப்படுகிறது.

ஏன் இந்த மாற்றம் என்று ஆராய்ந்து பார்த்தால் சற்று அதிர்ச்சியாக உள்ளது,
நான்கு வீதிகளில் உள்ள சில பெரிய நிறுவனங்கள் தங்கள் கட்டடத்திற்கு எந்த பாதிப்பும் நேர்ந்துவிடக்கூடாது என்பதற்காக, ஆழித்தேரின் அளவை குறைக்க தேர் கட்டும் கட்டுமான பணியாளர்களிடம் லஞ்சம் தந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

எனவே இதை சரி செய்யும் நோக்கிலே கோவிலின் நிர்வாகம் தேரின் தேதியை 04/06/17 என்று தேதியை மாற்றியுள்ளதாக  தெரிய வருகிறது.

உலகின் பிரசித்தி பெற்ற திருவாரூரின் ஆழித்தேரைக் காணவரும் மக்களுக்கு ஏமாற்றம் தரும் வகையில் இந்த செயல் அமைந்துள்ளது.

இது உண்மையாக இருக்குமானால், தங்கள் சுய நலத்திற்குகாக ஒட்டுமொத்த மக்களின் உணர்களை சிதைக்கும் வகையில் உள்ளது. இந்த செயல் வன்மையாக கண்டிக்கதக்க செயல் என்பதைத் தெரிவிக்கிறோம்.. என்று திருவாரூரில் பரவலாகப் பேசப்படுகிறது.

போருக்கு தயாராகிறது பாகிஸ்தான்: எல்லையில் விமானங்கள் நிறுத்தம்!

புது தில்லி:

போருக்கு தயாராகும் பாகிஸ்தான் எல்லையில் போர் விமானங்கள், வீரர்களை குவித்து வருகிறது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் நிலைகளை இந்திய ராணுவம் நேற்று தாக்கி அழித்த வீடியோக்கள் வெளியான நிலையில், எல்லைப் பகுதியில் அதிக ராணுவ வீரர்களை பாகிஸ்தான் இன்று குவித்து வருகிறது. எல்லைப்பகுதியில் விமான தளங்களை தயார் நிலையில் வைத்திருக்கும்படி பாகிஸ்தான் ராணுவத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிக உயரமான போர் முனை என்று கூறப்படும் சியாசின் பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் சுற்றி வர அந்நாட்டு ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில்,

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் மீது இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், அது பாகிஸ்தானை திருப்பித் தாக்கும் என்றும் அமெரிக்கா கணித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவ உளவு ஏஜென்சியின் இயக்குனர் வின்சென்ட் ஸ்டிவர்ட் இதனைக் கூறியுள்ளார்.

திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் தீ: கணினி அறை சேதம்

காரைக்கால் :

காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில். இன்று முற்பகல் கோயில் தேவஸ்தான அலுவலக கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
கோயில் நடவடிக்கைகளை கண்காணிக்க சிசிடிவி கேமரா வைக்கப்பட்டிருந்த ஹப்.. பகுதியில் ஏற்பட்ட மின் கேபிளில் ஏற்பட்ட ஷார்ட்சர்க்யுட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாம். தீ மள மள வென பரவி, அங்கிருந்த யுபிஎஸ், கணினிகள், மின்சாதனங்கள், ஏசி, கேமராக்கள் உள்ளிட்டவை முற்றிலும் சேதம் அடைந்தன.

தேவஸ்தான கணக்கு வழக்குகள் குறித்த ஆவணங்கள், முக்கியமான பொருள்கள் வேறு அறையிலும், வாகன மண்டபத்தை ஒட்டிய அறையிலும் வைக்கப்பட்டிருந்ததால், இந்தத் தீவிபத்தால் அவை ஏதும் பாதிக்கப்படவில்லை.

தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன. பின்னர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக கோயில் வளாகத்துக்கு வந்து, தீவிபத்து குறித்து விசாரணை செய்து பார்வையிட்டார்.

திருநள்ளாறு கோயிலில் வழக்கமாக சனிக்கிழமைகளில் அதிக பக்தர்கள் வருகை இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற இருப்பதால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னமேயே தொடங்குவதும் வழக்கம்.

பிரதமர் மோடியைச் சந்தித்து முதல்வர் எடப்பாடி மனு கொடுத்தார்!

புது தில்லி:

தில்லியில் பிரதமர் மோடியைச் சந்தித்த பின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது,

குடி மராமத்து பணிக்காக மத்திய அரசு ரூ.500 கோடி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தேன்.

இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்.

மத்திய அரசு திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்கவும் கோரிக்கை வைத்தேன்.

தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தேன்.

பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்தேன்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

விவசாயிகளுக்கு நிவாரணத்தொகை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினேன்… என்று கூறினார்.