
வரதன் வந்த கதை ( பகுதி – 8 )
வசிட்டன் சொன்ன காரணம் கேட்டு நான்முகன் செய்வதறியாது திகைத்தான்..
வேள்விக்காக நகரத்தைத் தயார் செய்து, அலங்கரித்து , அனைவருக்கும் அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டு யாவும் தயார் என்ற நிலையில், பிரமன் வாடிப்போகுமளவிற்கு அப்படி வசிட்டன் சொன்னது தான் என்ன ;?
ஒரு விஷயத்தைப் பிரமன் அலட்சியப்படுத்தினான் அல்லது பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி மறந்தே போனான் என்று தான் சொல்ல வேண்டும் !
அவ்விஷயம் நினைவிற்கு வரவும் வசிட்டன் , நான்முகனுக்கு அதனை உணர்த்தினார் ..
உணர்த்தப்பட வேண்டிய முக்கியமான விஷயம் தான் அது ! அதனால் தான் வசிட்டர் சொல்லவும் ( பிரமன் ) திகைப்புக்குள்ளானான் !
இல்லாளுடன் இணைந்தன்றோ வேள்வி செய்ய வேண்டும் ! அவளோ தன்னாற்றின் கரையில் தவமியற்றச் சென்று விட்டாள் !!
ஸஹ தர்ம சாரிணியான ( கணவன் உடனிருந்து , அவன் அறங்களை அநுட்டிக்க உதவுமவள் ) அவளில்லாமல் வேள்வி எப்படி சாத்தியம் ?
இது தான் வசிட்டன் பேசியது !
நான்முகன் சிறிது நேரம் சிந்தித்து விட்டு கூடியிருந்தவர்களிடம் பேசலானான் !
இத்தனை பெரிய வேள்வியை நான் செய்யப் போகிறேன் ! இவ்விஷயம் ஈரேழு பதினான்கு லோகங்களுக்கும் தெரியும் ! கோபமுற்றுத் தவமியற்றச் சென்றிருக்கும் ஸரஸ்வதியும் அறிந்திருப்பாள் !!
எனவே அவளாகவே வரமாட்டாளா ? என்று பிரமன் வினவவும் சபை சலனமற்று இருந்தது !
பிரமனின் தான்மை( ego ) அவளை அழைக்க மறுத்தது ! புரிந்து கொண்டார் வசிட்டர் .. தந்தைக்கு உபதேசம் செய்தார் தநயன்.. தான் ஸரஸ்வதியை , பிரமன் அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லி அழைத்து வர முயல்வதாக உறுதியளித்துப் புறப்பட்டார் !
வசிட்டர் தன்னை நாடி வருகிறார் என்று ஸரஸ்வதி அறிந்திருந்தாளோ என்னவோ ; வரட்டும் வசிட்டன்.. நம் குறைகளைச் சொல்லிடுவோம் என்று காத்திருந்தாள் !
ஆனால் , நன்மைகளை விரும்பிடாத அஸுர வர்க்கத்தினர் ஸரஸ்வதி யாகத்திற்குச் சென்று விடுவளோ என்றஞ்சினர் ! அவள் சென்றிடவே கூடாதென்பதில் உறுதியாக இருந்தனர் ! ஆம் ! யாகம் நன்கு நடைபெற்று விட்டால், தேவர்கள் -ரிஷி முனிவர்கள் மற்றும் பிரமன் – ப்ருஹஸ்பதி பிரச்சினைகள் தீர்ந்து விடும் .. அது அஸுரர்களான தங்கள் நலனிற்கு உகந்ததல்ல.. எனவே எப்பாடு பட்டேனும் யாகத்தைத் தடுப்பது என்கிற முனைப்பில் ஈடுபட்டிருந்தனர் !!
வசிட்டர் ஸரஸ்வதியை (அழைக்க ) அணுகினார் ! அவளை விழுந்து வணங்கி தான் வந்த காரியத்தை விண்ணப்பித்தார் !
ஊடலால் கலங்கின ஸரஸ்வதி போகலாமா வேண்டாமா என்று சிந்தித்திருந்தவள் , தீர்மானமாக நான் வரமாட்டேன் என்றுரைத்தாள் !
வசிட்டர் எத்தனையோ சொல்லியும் , கெஞ்சியும் கூட அவள் மனம் மாறவில்லை !
தலையைத் தொங்கவிட்ட படி வசிட்டர் பிரமனிடம் வந்து சேர்ந்து நடந்தவற்றை எடுத்துரைத்தார் !
பிரமன் தனது கண்களை உருட்டியபடி, சரி ! அவள் ( ஸரஸ்வதி ) வர மாட்டேன் என்கிறாள்.. வேள்வியோ செய்தே ஆக வேண்டிய ஒன்று !
கவலையில்லை ! ஸாவித்ரீ முதலான மனைவிகளைக் கொண்டு வேள்வியைத் தொடங்கிடுவோம் என்று தீர்மானித்துத் தொடங்கவும் செய்தார் !
ஸரஸ்வதி வரவில்லையென்றால் வேள்வி தடைப்பட்டுப் போகும் என்றெண்ணியிருந்த அஸுரர்கள் ஏமாற்றத்திற்குள்ளாயினர் !
பிரமன் மற்ற மனைவிகளின் துணையோடு யாகத்தினை ஆரம்பிப்பார் என்று அவர்கள் நினைத்தே பார்க்கவில்லை !
ஒன்றும் குறையில்லை.. ஸரஸ்வதியைக் கொண்டே ஏதேனும் க்ருத்ரிமம் செய்வோம் என்று முடிவு செய்து ,கள்ள வேடம் பூண்டு ஸரஸ்வதியை அணுகினர் அஸுரர்கள் ! இல்லாததும் பொல்லாததும் சொல்லி ஸரஸ்வதியை மூளைச் சலவை செய்தனர்.. ஸாவித்ரீ முதலான மனைவியர்க்கு முக்யத்துவம் தந்து நான்முகன் உனக்கு அநீதி இழைத்தனன் என்று அவ்வஸுரர்கள் சொல்வதை மெய்யென்றே எண்ணினாள் மங்கைக் கலைவாணியும் ! ஏதேனும் ஒரு உபாயம் செய்து வேள்வியைத் தடுக்க முனைந்தாள் !
அஸுரர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர் ..
சம்பராஸுரனைக் கொண்டு வேள்வியைக் குலைக்கலாம் என்று குதூகலித்தனர் !
சம்பராஸுரன் மிகுந்த சந்தோஷத்துடன் இசைந்தான் ! கண்ணுக்குப் புலனாகாமல் விசித்திரமான வழிமுறையில் வேள்வியைக் குலைக்கத் திட்டமிட்டான் !
அதென்ன விசித்திரமான திட்டம் !! ஆம் !! காரிருள் ( கும்மிருட்டு ) ஒன்றை உண்டாக்கி யாக சாலையில் , ஒரு பொருளும் தெரியாத படிச் செய்தான் !
பொருள்கள் மட்டுமா ?! பிரமனுக்கோ பிறர்க்கோ ஒருவரையொருவர் பார்த்தறிந்து கொள்ள முடியாத நிலை ( இருட்டினால் ) ஏற்பட்டது !!
என்ன செய்வதென்றறியாத நிலையில் , பிரமன் ” மஹத்யாபதி ஸம்ப்ராப்தே ஸ்மர்த்தவ்ய: பகவான் ஹரி : ” ( பெரிய ஆபத்து ஏற்படும்பொழுது ஸ்ரீஹரியைச் சிந்திக்க வேண்டும் ) என்று சாஸ்த்ரங்கள் சொன்னபடி , இருகரம் குவித்து இறைவனை இறைஞ்சினான் !!
ஆபத் ஸகன் ஆயிற்றே பகவான் ! வாராதிருப்பானோ ?!
அப்பொழுது வார்த்தைகளால் வருணிக்கமுடியாத ஒரு பேரொளி தோன்றியது .. ஒளி தோன்றிடவும், அச்சத்தை உண்டு பண்ணின இருட்டு விலகத் தொடங்கியது !!
ஆச்சரியத்தால் வாய் பிளந்து நின்ற பிரமன் மெதுவாகத் தன்னை ஆச்வாஸபடுத்திக் கொண்டு , அழுத்தமாக ,அனைவருக்கும் கேட்கும்படியாக ஒரு சொல்லினை உச்சரித்தான் !!
“தீபப்ரகாசன் ” என்பதே அது !!
யார் அவன்..
விரைவில் …
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி
குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

With his Thiruttagappanaar (in the framed photo )



