- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
ஐபிஎல்-2024 இறுதி ஆட்டம் – சென்னை
கொல்கொத்தா vs ஹைதராபாத் – 26.05.2024
இன்று ஐபிஎல்-2024இன் இறுதிப்போட்டிக்கான ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணியை (18.3 ஓவரில் 113, பேட் கம்மின்ஸ் 24, ஐடன் மர்க்ரம் 20, கிளாசன் 16, ராகுல் திரிபாதி 9, ஷபாஸ் அகமது 8, ரசல் 3/19, மிட்சல் ஸ்டார்க் 2/14, ஹர்ஷித் ராணா 2/24) கொல்கொத்தா அணி (10.3 ஓவரில் 114/2, ரஹ்மானுல்லா குர்பாஸ் 39, வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 52, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 6 ரன், சுனில் நரேன் 6 ரன்) 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ஹைதராபாத் அணி முதலில் மட்டையாடத் தீர்மானித்தது. அந்த அணியின் முதல் மூன்று வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (பூஜ்யம் ரன், கோல்டன் டக்), அபிஷேக் ஷர்மா (5 பந்துகளில் 2 ரன்), ராகுல் திரிபாதி (13 பந்துகளில் 9 ரன்) மிக மோசமான தொடக்கம் தந்தனர். அதற்குப் பின்னர் வந்த ஐடன் மர்க்ரம் (23 பந்துகளில் 20 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (10 பந்துகளில் 13 ரன்), கிளாசன் (17 பந்துகளில் 16 ரன்), ஷபாஸ் அகமது (7 பந்துகளில் 8 ரன்), அப்துல் சமது (4 பந்துகளில் 4 ரன்) பாட் கம்மின்ஸ் (19 பந்துகளில் 24 ரன்), ஜெய்தேவ் உனக்தத் (4 ரன்) புவனேஷ் குமார் (றன் எடுக்கவில்லை, ஆட்டமிழக்கவில்லை) ஆகியோர் இன்று சரியாக ஆடவில்லை. இதனால் ஹைதராபாத் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 113 ரன் மட்டுமே எடுத்தது. ஐபிஎல் இறுதி ஆட்டங்களில் இதுவே மிகக் குறைந்த ஸ்கோராகும்.
114 ரன் அடித்தால் வெற்றி என்ற மிக எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கொத்தா அணிக்கு இரண்டாவது ஓவர் இரண்டாவது பந்தில் அதிர்ச்சி காத்திருந்தது, அதிரடி பேட்டர் சுனில் நரேன் இரண்டு பந்துகளைச் சந்தித்திருந்த நிலையில் 6 ரன் கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் மற்றொரு தொடக்க வீரரான ரஹ்மானுல்லா குர்பஆஸ் (32 பந்துகளில் 39 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) வெங்கடேஷ் ஐயர் உடன் (26 பந்துகளில் 52 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) இணைந்து அணியின் ஸ்கோரை 100 ரன்னுக்கு எடுத்துச்சென்றார். அவருக்குப்பின்னர் ஆட வந்த அணியின் தலைவர் ஷ்ரேயாச் ஐயர் மூன்று பந்துகளில் 6 ரன் அடித்து கொல்கொத்தா அணி 8 விக்கட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவி செய்தார்.
இந்த வருட ஐபிஎல் ஆட்டங்களில் ஆறு முறை 200க்கும் மேல் ரன் எடுத்த சன்ரைசர்ஸ் அணி இன்று 113 ரன்னுக்கு ஆட்டமிழந்தது மிகவும் பரிதாபம்.
கொல்கொத்தா அணியின் பந்துவீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார். அதே அணியின் மற்றொரு பந்துவீச்சாளர் சுனில் நரேன் இந்த போட்டியின் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.