முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
இரண்டாவது எலிமினேட்டர் ஆட்டம்
ராஜஸ்தான் vs ஹைதராபாத் – 24.05.2024
இன்று இறுதிப்போட்டிக்கான இரண்டாவது தகுதி ஆட்டம் சென்னையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கும் இடையே நடைபெற்றது.
ஹைதராபாத் அணி (175/9, ஹெராவிஸ் ஹெட் 34, ஷபாஸ் அகமது 18, அபிஷேக் ஷர்மா 12, போல்ட் 3/45, ஆவேஷ் கான் 3/27, சந்தீப் ஷர்மா 2/25, ஹென்றிச் கிளாசன் 50, ராகுல் திரிபாதி 37, ட்) ராஜஸ்தான் அணியை (139/7, துருவ் ஜுரல் 56*, யஸஷ்வீ ஜெய்ஸ்வால் 42, டாம் கோலர் 10, சஞ்சு சாம்சன் 10, ஷாபாஸ் அகமது 3/24, அபிஷேக் ஷர்மா 2/24) 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவாதலையா வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் ட்ராவிஸ் ஹெட் (28 பந்துகளில் 34 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்), மற்றும் அபிஷேக் ஷர்மா (5 பந்துகளில் 12 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். மூன்றாவதாகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி (15 பந்துகளில் 37 ரன், 5 ஃபோர், 2 சிக்சர்) அதிரடி ஆட்டம் ஆடினார். அதற்குப் பின்னர் வந்த ஐடன் மர்க்ரம் (1 ரன்), நிதீஷ் குமார் ரெட்டி (5 ரன்), அப்துல் சமது (பூஜ்யம் ரன்), பாட் கம்மின்ஸ் (ஆட்டமிழக்காமல் 5 ரன்), ஜெய்தேவ் உனக்தத் (5 ரன்) ஆகியோர் இன்று சரியாக ஆடவில்லை. இடையில் ஹென்றிச் கிளாசன் (34 பந்துகளில் 50 ரன், 4 சிக்சர்) ஷபாஸ் அகமது (18 பந்துகளில் 18 ரன், 1 சிக்சர்) இருவரும் அணியின் ஸ்கோரை 20 ஓவர்களில் 9 விக்கட் இழப்பிற்கு 175 ரன் என்ற நிலைக்கு எடுத்துச் சென்றனர்.
176 ரன் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யசஷ்வீ ஜெய்ஸ்வால் (28 பந்துகளில் 42 ரன், 4 ஃபோர், 3 சிக்சர்) மற்றும் டாம் கோலர் காட்மோர் (16 பந்துகளில் 10 ரன், 1 ஃபோர்) சுமாரான தொடக்கம் தந்தனர். இவர்களுக்குப் பின்னர் ஆடவந்த சஞ்சு சாம்சன் (11 பந்துகளில் 10 ரன், 1 ஃபோர்) மற்றும் ரியன் பராக் (10 பந்துகளில் 6 ரன்) இருவரும் இன்று ஜொலிக்கவில்லை. இதன் பின்னர் ஆடவந்த ஷிம்ரன் ஹெட்மயர் (4 ரன்), அஷ்வின் (பூஜ்யம் ரன்) ரொவ்மன் போவல் (6 ரன்) ஆகியோர் இன்று சொற்ப ரன் களுக்கு ஆட்டமிழந்தனர். துருவ் ஜுரல் (34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 50 ரன், 4 சிக்சர்) வெற்றி பெற இன்னமும் வாய்ப்பிருக்கிறது என்ற நம்பிக்கையைத் தந்துகொண்டிருந்தார். இருப்பினும் 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கட் இழப்பிற்கு 139 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. தமிழக வீரர் நடராஜன் கடைசி இரண்டு ஓவர்களை பிரமாதமாக வீசினார். ஆனால் துருவ் ஜுரலுக்கு அவர் வீசிய ஒரு பந்து தொண்டையில் பட்டது. இதனை அவர் தவிர்த்திருக்கலாம். சுழல்பந்து வீச்சாளர்கள் ஷபாஸ் அகமதும் அபிஷேக் ஷர்மாவும் சிறப்பாக பந்து வீசினார்கள். சன்ரைசர்ஸ் அணிக்காக 15 பந்துகளில் 37 ரன் எடுத்த ராகுல் திரிபாதி போல ராஜஸ்தான் அணியில் ஒருவர் கூட ஆடாததே தோல்விக்குக் காரணமானது.
இனி வருகின்ற 26ஆம் தேதி சென்னையில் இறுதிப்போட்டியில் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடும். சன்ரைசர்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஷாபாஸ் அகமது தனது சிறப்பான பந்துவீச்சிற்காக ஆட்டநாயகன் விருது பெற்றார்.