
பிரதமர் நரேந்திர மோடி, தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில், இன்று மாலை தியானம் மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தபின் விவேகானந்தர் மண்டபம் சென்றார். இங்கே, இரு தினங்கள் தியானம் மேற்கொள்வதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி, சனிக்கிழமை மாலை வரை அவர் அங்கே தியானம் மேற்கொள்கிறார்.
மக்களவைத் தேர்தலின் சூறாவளி பிரசாரத்தை முடித்துக் கொண்ட பின்னர், பிரதமர் மோடி கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் செய்ய முடிவு செய்தார். இதன் ஒரு பகுதியாக, இன்று தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட அவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த அவர், புகழ்பெற்ற சக்தி பீடக் கோயிலான பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்தார்.
பின்னர் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்குச் சென்றார். அங்கே சுவாமி விவேகானந்தர், பகவால் ஸ்ரீராமகிருஷ்ணர், அன்னை சாரதா தேவி சந்நிகளில் வழிபட்டு, தனது தியானத்தை தொடங்கினார். இன்று தியானத்தை தொடங்கும் அவர் ஜூன் 1-ந்தேதி மாலை தான் தியானத்தை நிறைவு செய்கிறார். சுமார் 48 மணி நேரங்கள் தொடர்ந்து தியானத்தில் இருக்கவுள்ளார் பிரதமர் மோடி. இந்த இரு நாட்களும் உணவு ஏதும் ஏற்காமல், முழுமையான தியான நிலையில் இருப்பதாக தீர்மானித்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த கையோடு நாட்டின் வட கோடியில் உள்ள இமயமலையின் கேதார்நாத் சென்று அங்கே குகைகளில் தியானம் மேற்கொண்டார். இப்போது நாட்டின் தென்கோடி முனையான கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் பாறையில் தியானம் மேற்கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், வழக்கம் போல் அரசியலில் இறங்கியிருக்கிறது காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான திமுக., ஆகியவை. ஜூன் 1-ந்தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்போது, மோடி தியானம் செய்வது தேர்தல் நடத்தை விதியை மீறுவதாகும். இதனால் தியானத்தை தடைவிதிக்க வேண்டும் என திமுக, காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இது தேர்தல் நடத்தையில் வராது என்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்று தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்டு, திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வந்தடைந்த பிரதமர் மோடி, இன்று முதல் ஜூன் 1-ந்தேதி வரை மாலை வரை தியானம் மேற்கொண்டிருக்கிறார்.
பிரதமர் வருகையொட்டி கன்னியாகுமரில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.