முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
T20 ஆண்கள் கிரிக்கட் உலகக் கோப்பை 01.06.2024 முதல் 29.06.2024 வட அமெரிக்காவிலும் மேற்கு இந்தியத் தீவுகளிலும் நடக்கவுள்ளது. அந்தப் பகுதியின் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு வெளியில் அமெரிக்காவில் முதன் முதலில் நடைபெறுகின்ற உலகக் கோப்பைப் போட்டி இது. இங்கிலாந்து நடப்புச் சாம்பியனாகும். சென்ற முறை நடந்த போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து இங்கிலாந்து அந்தப் பட்டத்தைப் பெற்றது.
இதுவரை 16 அணிகள் மட்டுமே இந்தப் போட்டியில் கலந்துகொண்டன. இம்முறை 20 அணிகள் கலந்துகொள்கின்றன. 20 அணிகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் A பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து, அமெரிக்கா ஐக்கிய நாடுகள் உள்ளன. குரூப் B பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய நாடுகள் உள்ளன. குரூப் C பிரிவில் நியூசிலாந்து, மேற்கு இந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், பாபுவா நியூகினியா, உகாண்டா ஆகிய நாடுகள் உள்ளன. குரூப் D பிரிவில், தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நேபாளம், நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் ஒன்றோடொன்று 01.06.2024 முதல் 19.06.2024 வரை லீக் போட்டிகளில் விளையாடும். ஒவ்வொரு குரூப்பிலும் பட்டியலில் முதலிரண்டு அணிகள் சூப்பர் எட்டு பிரிவுக்குச் செல்லும்.
சூப்பர் எட்டில் அணிகள் குரூப் 1 குரூப் 2 என இரண்டாக பிரிக்கப்படுகின்றன. குரூப் 1இல் A1, B2, C1, D2 அணிகள் இடம்பெறும். A2, B1, C2, D1 அணிகள் இடம்பெறும். இந்த இரண்டு குரூப்புகளிலும் முதலிரண்டு இடம் பெறும் அணிகள் அரையிறுதி ஆட்டத்திற்குச் செல்லும். இங்கிருந்து ‘நாக் அவுட்’ போட்டிகள் தொடங்குகின்றன. இதில் வெற்றிபெறும் இரண்டு அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடும்.
இந்த டி20 ஆட்டங்களை பல்வேறு நாடுகளில் வெவ்வேறு ஒளிபரப்பு நிறுவனங்கள் ஒளிபரப்பு செய்கின்றன. இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும் டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் இணையத்திலும் ஒளிபரப்பு செய்கின்றன.
இந்திய அணி அமெரிக்காவில் நடக்கும் லீக் சுற்று ஆட்டங்கள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை பார்ப்பதற்கு ஏதுவாக பெரும்பாலும் காலையில் நடக்கின்றன. அந்த நேரத்தில் இந்தியாவில் இரவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் எல்லா போட்டியும் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. அமெரிக்க நேரப்படி மூன்று போட்டிகள் காலை 9.30 மணிக்கும், ப்ளோரிடா மாகாணத்தில் நடக்கும் ஒரு போட்டி மட்டும் காலை 10:30 மணிக்கு நடக்கிறது. ஆனால் இந்த போட்டியும் இந்திய நேரப்படி நாம் இரவு 8 மணிக்கு பார்க்கலாம். மேலும் இந்தப் போட்டிகளை டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலிலும், ஆன்லைனில் டிஸ்னி ஹாட் ஸ்டாரிலும் பார்க்கலாம். இந்தியாவின் லீக் சுற்று ஆட்டங்கள் பின்வரும் நாட்களில், பின்வரும் மைதானங்களில் நடக்கின்றன:
(1) ஜூன் 5ஆம் தேதி அயர்லாந்து நியூயார்க் மைதானம்
(2) ஜூன் 8ஆம் தேதி பாகிஸ்தான் நியூயார்க் மைதானம்
(3) ஜூன் 12ஆம் தேதி அமெரிக்கா நியூயார்க் மைதானம்
(4) ஜூன் 15ஆம் தேதி கனடா ப்ளோரிடா மைதானம்