காதல், கல்யாணம், குழந்தை… நினைப்பிலேயே ஆணுக்கும் பெண்ணுக்கும் இவ்ளோ வித்யாசமா?

Published:

marrige

காதல் கல்யாணம் குழந்தை என்றெல்லாம் இதுவரையிலும் யோசித்துக் கொண்டிருந்த ஆண்களும் பெண்களும் இப்போது தங்கள் எண்ண அலைகளில் மாற்றத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

திருமணமே வேண்டாம் என்கிறார்கள் இளைஞர்கள்…. இந்த அதிர்ச்சித் தகவல் ஓர் ஆய்வில் வெளியாகி உள்ளது. அதே நேரம், இளம் பெண்களோ காதல் திருமணத்தை அதிகம் விரும்புகிறார்கள். கள ஆய்வு காட்டும் இன்னும் வித்தியாசமான சிந்தனைகள் என்ன தெரியுமா?!

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வந்த நேரத்தில், 23 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், மற்றும் 24 முதல் 39 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் மனநிலையை அறியும் முயற்சியில் யூகவ் – மின்ட் – சிபிஆர் நிறுவனங்கள் வாழ்க்கைப் புரிதல் குறித்த கேள்விகளுடன் கள ஆய்வில் ஈடுபட்டன.

இந்த ஆய்வின் போது, திருமணத்திலும், குழந்தை பெற்றுக் கொள்வதிலும் இளைஞர்களின் விருப்பம் குறைந்து வருவது தெரியவந்துள்ளது. 10 ஆயிரத்திற்கும் குறைவான மாத வருமானம் உள்ளவர்களில் 39 சதவீதம் ஆண்கள், தங்களுக்கு திருமணமே வேண்டாம் எனும் விரக்தி மனநிலையில் உள்ளனர். 25 ஆயிரம் ரூபாய்க்குள் மாத வருமானம் உள்ளவர்களில் 25 சதவீதம் பேரும், 60 ஆயிரத்திற்கும் மேல் சம்பாதிப்பவர்களில் 21 சதவீதம் பேரும்கூட, தங்களுக்கு திருமணத்தில் விருப்பமில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், 10 ஆயிரம் ரூபாய்க்குள் மாத வருமானம் உள்ள பிரிவினரில் 4ல் ஒருவர், தமக்கு குழந்தை வேண்டாம் என்று கருத்து தெரிவித்துள்ளார். 25 ஆயிரம் ரூபாய்க்குள் மாத வருமானம் இருப்போரில் 20 சதவீதத்தினரும், ரூ.60 ஆயிரத்துக்கு மேல் மாத வருமானம் இருப்போரில் 19 சதவீதத்தினரும் தங்களுக்கு குழந்தை வேண்டாம் என கூறியுள்ளனர். சொந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களையும், மொழியைச் சேர்ந்தவர்களையுமே திருமணம் செய்வோம் என்று 30 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

இளைஞர்களிடம் காதல் திருமணத்துக்கு ஆதரவு அதிகம் காணப் படுகிறது. 24 – 39 வயதுக்குட்பட்டோரில் 62.3 சதவீதத்தினர் காதல் திருமணத்தையே விரும்புகின்றனர். மீதமுள்ள சதவீதத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணமே சிறந்தது என்று கூறுகின்றனர். 23 வயதுக்கு உட்பட்டோரில், 10ல் 7 பேர் காதல் திருமணமே மகிழ்ச்சியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, ஆண்களை விட பெண்களே காதல் திருமணத்தை அதிகம் விரும்புகின்றனர். பெண்களில் 49 சதவீதத்தினர் காதல் திருமணத்தையே தேர்ந்தெடுக்கலாம் என்கின்றனர். அதே நேரம், 30 சதவீத பெண்கள், திருமணமே வேண்டாம் என்கின்றனர்.

ஆண்களில் 41 சதவீதத்தினர் காதல் திருமணத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அவர்களில் 32.5 சதவீதத்தினர் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை விரும்புவதாகக் கூறுகின்றனர். 26.5 சதவீதத்தினர் திருமணமே வேண்டாம் என்கின்றனர்.

காதல், கல்யாணம், குழந்தைப் பேறு என எல்லாவற்றிலும் இப்போது மாத வருமானமும், வருவாயும் பெரும் பங்கினைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. நிச்சயமற்ற சூழல், வேலைவாய்ப்பு, குழந்தைகளின் பள்ளிக் கல்விக்கு ஆகும் செலவு, குழந்தை வளர்ப்புக்கு செலவிடக் கூடிய மிகப் பெரும் தொகை இவை எல்லாம் இத்தகைய மனப்போக்குக்கு இளைஞர்களை இட்டுச் சென்றிருக்கிறது.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள தொழில் மந்த நிலை, வேலைச் சூழல், எதிர்காலம் எப்படி அமையுமோ என்ற எண்ணம், பணியிழப்புகள் என பல்வேறு எண்ணச் சிக்கல்களில் இள வயது ஆண்கள் அகப்பட்டுக் கொண்டிருப்பது இதில் தெரியவந்திருக்கிறது.

Related articles

Recent articles

spot_img