விளைஞ்ச காய்கறி விலை போகல… வருத்தத்தில் விவசாயிகள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் புகார் பெட்டி மதுரை லைஃப் ஸ்டைல்
brinjal

மதுரை, சோழவந்தான் அருகே விளைந்த காய்கறிகள் விலை போகாமல் சேதம் அடைந்து வருகிறது விவசாயிகளை கவலைக்கு உள்ளாக்கியுள்ளது.

சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்ணுடையாள்புரம் கிராமத்தில் பல்வேறு விவசாயங்கள் நடந்து வருகிறது இதில் கத்திரிக்காய், சீனிஅவரைக்காய், தக்காளி உள்பட பணப்பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்போது ஊரடங்கு உத்தரவால் காய்கறிகளை எடுத்து வெளியே கொண்டு செல்ல முடியாத அவல நிலையில் விவசாயிகள் உள்ளனர். இதனால் விலைபோகாத விளைந்த காய்கறிகள் பழுத்து அழுகி மண்ணோடு மண்ணாக நாசம் அடைந்து வருகிறது. இதனால்  காய்கறிகள் பயிரிட விவசாயிகளுக்கு  பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது.

இதுகுறித்து விவசாயி பஞ்சவர்ணம் (45) கூறியதாவது:

நாங்க ரொம்ப காலமா காய்கறி பயிரிட்டு வருகிறோம் அதேபோல இந்த ஆண்டும் சீனிவரக்கா, தக்காளி, அவரக்கா, கத்திரிக்கா பயிர் செய்தோம். தற்போது விளைந்து விற்பனைக்கு செய்யக்கூடிய நிலையில் கொரோனா நோய் வந்துருச்சு. அதிலிருந்து நாங்க காய்கிற பறிக்க முடியல…

அப்படியே காய்கறிகள பறித்து மதுரை கொண்டு போனாலும் ரொம்ப குறைஞ்ச விலைக்கே கேட்கிறாங்க. ஏன் இப்படினு கேட்டா இந்த பாழா போன நோயினால யாரும் காசு இல்லாம காய்கறி வாங்க வர மாட்டாங்கன்னு சொல்றாங்க..

இப்படி சொன்னா நாங்க எங்க போயி… வாங்கிய கடனை எப்படிஅடைக்க முடியும்?! இப்ப வெளஞ்ச காய்கறி விற்க முடியாம செடியிலே பழுத்து அழகி வீணாக போவுது… அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுத்து எங்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யணும் எங்க பிள்ளைங்கள எல்லாம் காப்பாத்தனும்!  நான் மட்டுமில்லீங்க… இந்த பகுதியில் பல விவசாயிகள் இதே நிலையில தான் இருக்காங்க … எங்களுக்கு ஏதாவது நிவாரணம் வழங்கணும்னு கேட்டுக்குறேன்… என்றார்!

இந்தியாவின் முதுகெலும்பு என்று விவசாயிகளை கூறி வருகின்றனர். இந்த விவசாயிகளுக்கு பலதரப்பட்ட நஷ்டங்கள் ஏற்பட்டு வருகிறது. அரசு விவசாயிகள் மீது கவனம் செலுத்தி தொடர்ந்து விவசாயம் செய்வதற்கான நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கி அவர்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை தீர்க்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் பாலமுருகன் நம்மிடம் அக்கறையுடன் கூறினார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.