முகக் கவசம் அணியாவிட்டால்… பெட்ரோல் கிடையாது! இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
பெட்ரோல் மையம்

தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்களில் இன்று முதல் முககவசம் கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது. முககவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது என்று, தமிழ்நாடு பெட்ரோலிய வணிகர் சங்கம் அறிவித்துள்ளது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் முக கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படமாட்டாது என்ற விதிமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு விதிமுறைகள் இன்று முதல் மீண்டும் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் நெல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு, வாகனங்களில் பெட்ரோல் விற்பனைசெய்யப்படாமல், அவர்களை திருப்பி அனுப்பினர்! தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் இதே நடைமுறை பெட்ரோல் நிரப்பும் மையங்களில் கடைபிடிக்கப் படுகிறது.

தமிழகம் முழுவதும் தேர்தல் கால கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், வாக்கு சேகரிப்பு கூட்டங்கள் ஆகியவை கொரோனா விதிமுறைகள் எதுவும் கடைப்பிடிக்கப் படாமல், தேர்தலும் நடந்து முடிந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது.

நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களிலும் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மையங்களில் அனுமதிக்கப் பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கோவில் திருவிழாக்களுக்கு தடை , திருமண நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி , பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்தது.

இந்த விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நெல்லையில் உள்ள பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட வந்த வாடிக்கையாளர்களில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களிடம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. அவர்களின் வாகனங்களில் பெட்ரோல் போடாமல் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர் . நெல்லை மாநகர் பகுதியில் உள்ள 50 க்கும் மேற்பட்ட பங்குகளில் முகக் கவசம் கட்டாயம் என்பது முழு அளவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.