அயல் நாட்டில் இந்தியக் கொடியை ஏற்றிய மேடம் காமா (1861 – 1936)

Published:

IMG 20190804 WA0039 - 2026

தேசப் பற்றுடனும் வீர தீரத்துடனும் ஒரு பார்சி பெண்மணி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். அவரே குஜராத்தை சேர்ந்த மேடம் புகாஜி காமா.

1907, ஆகஸ்ட் 22 ல் மேடம் புகாஜி காமா, வீர் சவார்கர் மற்றும் ஷ்யாம் கிருஷ்ண வர்மா மூவரும் சேர்ந்து ஒரு புதிய கொடியை வடிவமைத்தனர். இக்கொடி, ‘மேடம் காமா கொடி’ என்றழைக்கப்பட்டது. இது 1907 ல் ஜெர்மனியில் ஸ்டூவர்ட் என்ற இடத்தில் இந்திய சோஷலிசக் கூட்டத்தில் முதன் முதலாக மேடம் காமாவால் ஏற்றப் பட்டது.

“This flag is of Indian Independence! Be hold! It is born. It has been made sacred by the blood of young Indians who sacrificed their lives. I called upon you, gentlemen to rise and salute this flag of Indian Independence. In the name of the flag, I appeal to lovers of freedom all over the world to support this!” (B.Cama, Stuttgart, 1907) என்று மேடம் காமா அங்கு சொற்பொழிவாற்றினார்.

“இது இந்திய சுதந்திரக் கொடி. கவனமாகப் பாருங்கள். இது பிறந்து விட்டது. தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்திய இளைஞர்களின் ரத்தத்தால் இது புனிதமாகியுள்ளது. அன்பர்களே! எழுந்து நின்று இந்த இந்திய சுதந்திரக் கொடியை வணங்குமாறு உங்களை அழைக்கிறேன். உலகெங்கிலும் உள்ள சுதந்திர பிரியர்களை இதனை ஆதரிக்குமாறு வேண்டுகிறேன்!”

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

ஒரு புடவை கட்டிய பெண்மணி வெற்றியுடனும் பெருமையுடனும் இந்திய சுதந்திரப் போராட்டச் சின்னமான தேசிய கொடியை அங்கு பறக்க விட்டார். அதனால் இது, ‘பெர்லின் கமிட்டிக் கொடி’ என்றும் பெயர் பெற்றது.

அது மேலே பச்சை வண்ணம், நடுவில் மஞ்சள், அடுத்து சிவப்பு வண்ணங்களைக் கொண்டிருந்தது. எட்டு தாமரைகள், வந்தே மாதரம், இந்து, முஸ்லீம் நம்பிக்கைகள் இணைந்த நாடான பாரத்தை குறிக்கும் சூரியனும் சந்திரனும் அக்கொடியில் இடம் பெற்றிருந்தன. .

மேடம் புகாஜி காமா பெரிய செல்வந்தரின் குடும்பத்தில்1861 ல் பிறந்தார். இவரின் தந்தையார் சோரப்ஜி வழக்கறிஞரும் வியாபாரியுமாக மிகப் புகழ் பெற்று விளங்கினார்.

மேடம் புகாஜி, 1885 ல் ருஸ்டம் காமா என்ற வழக்கறிஞரை மணந்தார். அவர் ஆங்கிலேய அரசை ஏற்று அரசியல் ஈடுபாட்டுடன் விளங்கினார். அவர்கள் வாழ்க்கை மகிழ்சிகரமாக அமையவில்லை. மேடம் புகாஜி காமா தன் நேரத்தையும் சக்தியையும் பொது நலத் தொண்டில் செலவிட்டார்.

1886 ல் பாம்பேயில் வறட்சியும் அதை தொடர்ந்த பிளேக் வியாதியும் தலைவிரித்தாடிய போது, மேடம் காமா தன்னலமற்ற தொண்டாற்றினார். அதன் காரணமாக அவரும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டார். ஆனால் இறைவனருளால் உயிர் பிழைத்தார். மிகவும் பலவீனமான உடல் நிலையில் 1901 ல் மருத்துவ உதவி பெறும் பொருட்டு இங்கிலாந்திற்கு அனுப்பப்பட்டார்.

ALSO READ:  தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய தருணம்!

1902 ல் இந்தியா திரும்ப இருந்த போது தாதாபாய் நவ்ரோஜியை சந்தித்தார். அவருடைய உதவியாளராக சேர்ந்து சேவை செய்யத் தொடங்கினார். 1905 ல் ஹோம் ரூல் இயக்கத்திற்காக மேடம் காமா நிதி திரட்டி உதவினார். அதனால் அவர் இந்தியாவிற்கு வருவதற்கு, ‘அவர் விடுதலைப் போராட்டச் செயல்களை விட்டு விட வேண்டும்’ என்று பிரிட்டிஷாரால் ஷரத்து விதிக்கப்பட்டது. அவர் அதனை மறுத்தார்.
IMG 20190804 WA0040 - 2026

மேடம் காமா, பாரிசுக்குச் சென்று ‘பார்சி இந்திய சொசைடியை’ உருவாக்கினார். அங்கிருந்தபடி இந்திய சுதந்திர போராட்டத்தை ஊக்குவிக்கும் கட்டுரைகளை எழுதி வெளியிட்டார். இப்பத்திரிகைகள் பாண்டிச்சேரி வழியாக இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்டன. .

மேடம் காமாவை பிரான்சை விட்டு துரத்தும்படி இங்கிலாந்து கேட்டும் பிரான்சு அரசு அதனை ஏற்கவில்லை. அதன் காரணமாக ஆங்கில அரசு மேடம் காமாவின் வாரிசுரிமையை பறித்து இந்தியாவிற்கு வருவதைத் தடை செய்தது. சோவியத் யூனியனுக்கு வரும்படி லெனின் அழைத்தும் மேடம் காமா மறுத்து விட்டார்.

1910 ல் எகிப்தில், கெய்ரோவில் பேசும் போது, “ஒரு பாதி எகிப்து மக்களே இங்கு அமர்ந்துள்ளீர்களே! மறு பாதி எங்கே? எகிப்தின் மைந்தர்களே! எகிப்தின் மகள்கள் எங்கே? தாய்மார்களும் சகோதரிகளும் எங்கே? உங்கள் மனைவியரும் புதல்வியரும் எங்கே? ஏனிந்த ஏற்றத் தாழ்வு?” என்று கேட்டு பெண்களின் முன்னேற்றத்திற்காகப் போராடினார்.

1914 ல் முதல் உலகப் போரில் பிரிட்டனும் பிரான்சும் இணைந்த போது, மேடம் காமாவைத் தவிர பார்சி இந்திய சொசைட்டியின் அங்கத்தினர்கள் அனைவரும் பிரான்சை விட்டு நீங்கினர்.

ALSO READ:  பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

1935 வரை மேடம் காமா ஐரோப்பாவில் தலை மறைவாக வாழ்ந்தார். பக்கவாத நோயால் மிகவும் அவதிப்பட்ட மேடம் காமா தாய் நாட்டுக்கு திரும்ப பிரிட்டிஷாரிடம் அனுமதி கேட்டார். தன் போராட்டச் செயல்களை விட்டு விடுவதாக எழுதிக் கொடுத்த பின்னரே அவர் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப் பட்டார். அதன் பின் ஒன்பது மாதங்களே வாழ்ந்த மேடம் காமா 13-8-1936 ல் பாம்பேயில் காலமானார்.

அனாதை பெண் குழந்தைகளின் கல்விக்காக தன் பெறும் செல்வத்தை டிரஸ்ட் ஏற்படுத்தி வழங்கினார் மேடம் காமா. 1962 ல் இந்திய அரசு அவர் பெயரில் தபால் தலை வெளியிட்டு கவுரவித்தது.

1907 ஆகஸ்ட் 22 ல் ஜெர்மனியில் அவர் ஏற்றிய கொடி இந்தியாவுக்கு கடத்தி வரப் பட்டு தற்போது பூனாவில் மராத்தா புத்தகசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தன்னலமற்ற, நாட்டுப் பற்று மிக்க இவ்வீர பெண்மையை வாழ்த்தி வணங்குவோம்.

-ராஜி ரகுநாதன்

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img