
திருப்பதி திருமலை ஸ்ரீவாரி லட்டு குறித்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் முக்கிய முடிவு எடுத்துள்ளது. லட்டு விலையை மிஞ்சிய கவர்களின் விலை இப்போது பெரும் சுமை ஆகியுள்ளது.
தற்போது, சணல் பைகளோடு கூட பேப்பர் அட்டைகளால் செய்யப் பட்ட பெட்டிகளை எடுத்து வருகிறது திருமலா திருப்பதி தேவஸ்தானம். வரும் பொங்கலுக்குள் பல நிலைகளாக பிளாஸ்டிக்கிற்கு முழுவதுமாக தடை விதிக்க திட்டமிட்டுள்ளது.
திருமலையில் பிளாஸ்டிக்கை முழு அளவில் தடை செய்வதற்கு திருமலா திருப்பதி தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை சென்ற வியாழக்கிழமை முன்னோட்டமாக தொடங்கி வைத்தார்கள் அதிகாரிகள் .

ஸ்ரீவாரி லட்டு பிரசாதத்தை பிளாஸ்டிக் கவரில் போட்டு கொடுக்காமல் பேப்பர் அட்டை டப்பாவிலோ சணல் பையிலோ போட்டு தர முடிவெடுத்துள்ளது. இனி ஶ்ரீவாரி லட்டுகளை காகித பெட்டிகளில் வைத்து பக்தர்களுக்கு அளிப்பார்கள். அவற்றோடு கூட பேப்பர் கப்புகளையும் விநியோகத்திற்கு எடுத்து வருகிறது திருமலா திருப்பதி தேவஸ்தானம்.
வரும் சங்கராந்தி பண்டிகைக்குள் பல நிலைகளாக பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க திட்டம் வகுத்துள்ளது. மேலும் திருமலையில் உள்ள அனைத்து தங்கும் வசதி இல்லங்களிலும் சுத்தமான குடிநீர் இயந்திரங்களை அமைத்து வருகிறார்கள். பக்தர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கச் செய்வதே இலக்கு என்றும் பிளாஸ்டிக் பாட்டில்களை தடை செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளது தேவஸ்தானம்.
சணல் பைகளை சென்ட்ரல் ஜூட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா தயாரித்து அனுப்பவுள்ளது. லட்டு விலையை விட சணல் பைகளின் விலை அதிகமாக இருப்பது குறித்து பக்தர்கள் ஏமாற்றம் தெரிவித்து வருகிறார்கள். இந்தப் பைகளுக்கு கொடுக்கும் விலையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக லட்டு வாங்கிவிடலாமே என்கிறார்கள்.

ஒரு சணல் பை விலை ரூ.25 ஆக நிர்ணயிக்கப் பட்டுள்ளது. அதை விட சற்று பெரிய பை ரூ.30. இவ்வாறு நான்கு அளவு களில் பைகள் கிடைக்கின்றன. அவற்றின் விலை 25, 30, 40, 55 ரூபாயாக உள்ளது.
அதிக விலை கொடுத்து பைகளை வாங்குவதற்கு பதில் தாங்களே மாற்று ஏற்பாடு செய்து கொண்டு, கைகளில் பைகளுடன் லட்டு வாங்கச் செல்வது நலம் என்று பக்தர்கள் எண்ணுகிறார்கள்.
பிளாஸ்டிக் தடை விதிப்பது மகிழ்ச்சியே. ஆனாலும் சணல் பை விலையை குறைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். சணல் பைகளோடு கூட ஃபுட் கிரேடு பேப்பர் பாக்கெட்டுகளிலும் லட்டுகளை வைத்து அளிக்க முடிவெடுத்துள்ளது தேவஸ்தானம்.
ஸ்ரீசைலத்தில் இதுபோன்ற அட்டைப் பெட்டிகள் உபயோகத்தில் உள்ளன. அவை வெற்றிகரமாக நடைமுறைக்கு வந்துள்ளன என்று திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி அனில் குமார் சிங்கல் தெரிவித்தார்.

அதேபோல் முதலில் திருமலையிலும் பின்னர் திருச்சானூர் மற்றும் பிற உள்ளூர் ஆலயங்களிலும் பயன்படுத்த முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இதில் உள்ள சிரமம் என்னவென்றால் இந்த அட்டைப் பெட்டிகள் இடத்தை அடைக்கும். பக்தர்கள் பெரிய பையை எடுத்து வர வேண்டியிருக்கும். அதோடு லட்டுவில் உள்ள நெய்யை அட்டைப் பெட்டிகள் உறிஞ்சி விடக்கூடும் என்பதால் லட்டுவின் சுவை குறையும். அதனால் அலுமினியம் ஃபாயில் வைத்த காகிதப் பெட்டிகளும் சணல் பைகளும் தேவைப்படுகின்றன என்று அவர் தெரிவித்தார்.