December 3, 2021, 12:37 pm
More

  மகர ஸங்க்ராந்தி ! உட்பொருள் என்ன?

  அதிகமான ஒளியினால் உயிரினங்களின் ஶக்தி ஒளிர்கின்றன.. அதனால் எடுத்த காரியங்களைச் சாதிக்கும் திறல் பெறுகின்றன.

  sun god surya - 1

  ஸூர்யன் மகர ராசியினுள்ளே ப்ரவேஶிப்பதையே நாம் ‘ மகர- ஸங்க்ராந்தி ‘ என்கிறோம். இந்த நாளிலிருந்து ஸூர்யன் வடக்கு நோக்கி நகர்கிறான்.

  உத்தராயணம் தேவர்களின் பகற்பொழுதாகவும், தக்ஷிணாயனம் அவர்களின் இரவுப்பொழுதாகவும் ஶாஸ்த்ரங்களினால் சொல்லப்படுகிறது. இவ்விதமாக மகர – ஸங்க்ராந்தி ஒரு வகையில் தேவர்களின் காலைப்பொழுதாகும்.

  இந்நன்னாளில் செய்யப்படும் தானம் தவம் முதலியவைகளுக்கு மிகுந்த ஏற்றம் உண்டு. இந்த நாளில் நாம் செய்யும் நற்காரியங்கள் ஒன்று நூறாயிரமாகக் கணக்கிடப்படுகின்றன.

  கம்பளி, நெய் இவைகளை இந்நாளில் தானம் செய்வது சிறந்ததாகக் கருதப்படுகிறது.

  மகர ஸங்க்ராந்தி தினத்தில் கங்கா ஸ்நானம், கங்கைக் கரையில் தானம் போன்றவைகளின் மஹிமை அளத்தற்கரியது.

  ‘தீர்த்த ராஜ’ ப்ரயாகை மற்றும் கங்கா ஸாகர் ஆகியவற்றில் குளித்திடுகை மகர- ஸங்க்ராந்தி பர்வத்தில் ப்ரஸித்தமானதாகும்.

  பாரததேஶமெங்கும் இந்நன்னாள் பல்வேறு பெயர்களால் கொண்டாடப்படுகின்றது.

  உத்தர ப்ரதேஶத்தில் இந்த விரதத்தை ‘கிச்சடி ‘ என்றழைக்கிறார்கள். அதனால் தான் அத்தேசத்தவர்கள் அன்றைய தினம் ( மகர- ஸங்க்ராந்தி ) கிச்சடி மற்றும் எள் தானம் செய்வதை விஶேஷமாகக் கொண்டுள்ளார்கள்.

  மஹாராஷ்ட்ரத்தில் கல்யாணமான பெண்கள், திருமணமாகி வரும் முதல் ஸங்க்ராந்தியில், எண்ணெய், பருத்தி (ஆடைகள் ), உப்பு ஆகிய பொருள்களை ஸௌபாக்யவதிகளான பெண்களுக்கு அளித்து மகிழ்கிறார்கள்.

  வங்காள தேஶத்தில் மகர-ஸங்க்ராந்தி அன்று எள் தானத்திற்கு ஏற்றம்.

  நம் தேஶத்தில் ( தென்னகத்தில்- தமிழகத்தில் ) பொங்கல் பண்டிகையாக இந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது..

  அசாமில் ‘ பிஹூ’ என்கிற உத்ஸவமாக இந்த நாள் அநுட்டிக்கப்படுகின்றது.

  ராஜஸ்தானத்தில் இந்த நாளில் சுமங்கலிப் பெண்கள் எள்ளுருண்டை,’ கேவர் ( ghevar ) என்கிற இனிப்பு வகை, மோதி சூர் லட்டு ஆகியவைகளைச் செய்து, சிறிதளவு காணிக்கையோடு தங்கள் தங்களுடைய மாமியார்களை வணங்கி ஆசி பெறுவது வழக்கம்.

  ஏதேனும் ஒரு பொருளை 14 ( பதினான்கு ) என்கிற எண்ணிக்கையில் எடுத்து ஸங்கல்பம் செய்து கொண்டு, பதினான்கு ப்ராஹ்மணர்களுக்கு தானம் செய்யும் வழக்கமும் அங்கு உண்டு.

  விவித பரம்பரைகளினால் இவ்வுத்ஸவம் நம்முடைய பாரத தேஶமெங்கும் / எல்லா மாநிலங்களிலும் கொண்டாடப்படுகின்றமையே இவ்விழாவின் சீரிய பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.

  நம்முடைய பாரத தேஶத்தில் ஸமய விஶேஷங்களில் தொடர்ச்சியாக வரும் அனைத்து பர்வங்களும் ( பண்டிகை – திருவிழாக்கள் ) ஶ்ரத்தையுடனும் ஆநந்தத்துடனும் நம்மவர்களால் கொண்டாடப்படுகின்றன.

  பண்டிகைகளும் திருவிழாக்களும் ஒவ்வொரு தேஶத்தினுடைய பண்பாட்டின் விழுமிய அடையாளங்களாகவும், அந்தந்த தேஶத்தவர்களை; அவர்கள் உணர்வுகளைத் தட்டி எழுப்புவதாகவும்; அவர்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதாகவும் விளங்குகின்றன.

  surya - 2

  நம் தேஶத்தில் பொதுவான பண்டிகைகள் கூட, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு விதமாக அநுட்டிக்கப்படுகின்றன.

  மகர ஸங்க்ராந்தி பண்டிகை நம் நாட்டினுடைய மிகச்சிறந்த அடையாளங்களில் ஒன்று.

  ‘ஸந்த ஶிரோண்மணீ’ கோஸ்வாமீ துலஸீதாஸர் இது விஷயமாகச் சொல்லியிருப்பதைக் காண்போம்.

  माघ मकरगत रबि जब होई । तीरथपतिहिं आव सब कोई ।। (ராம சரித மானஸ்)

  மகர-ஸங்க்ராந்தி பர்வம் ப்ரயாகையில் விஶேஷம் !

  கங்கை, யமுனை, ஸரஸ்வதி நதிகள் கூடும் ப்ரயாகையில், மகர-ஸங்க்ராந்தி அன்று தேவதைகள் அனைவரும் தங்களை மறைத்துக் கொண்டு, மக்களோடு மக்களாகக் கலந்து புனித நீராட வருகின்றனராம்.

  அதனால் தான் அன்றைய தினம் ப்ரயாகையில் தீர்த்தமாடுகை உயர்வாகச் சொல்லப்படுகிறது.

  ககோல ( வானியல் ) ஶாஸ்த்ரங்களின் படி, அன்றைய தினம் ஸூர்யன் தன்னுடைய கதியில் மாற்றத்தையுடையவனாய் தக்ஷிணாயனத்திலிருந்து உத்தராயணமாக ‘மகர ராஶியில்’ ப்ரவேஶிக்கிறான்.

  ராஶிகளோடு ஸூர்யனின் ப்ரவேஶங்கள்; ஸங்க்ரமணம் என்றும் ஸங்க்ராந்தி என்றும் அழைக்கப்படுகின்றன.

  ( புண்ய தீர்த்த ) ஸ்நாந தானங்களுக்கு இந்நன்னாளில் ஏற்றம். நம்முடைய தர்ம ஶாஸ்த்ரங்களில், புனித நீராடுதல் என்பது புண்ணியங்களைத் தரவல்லது என்பதோடன்றி, நம்முடைய உடல் நலத்தையும் நன்கு பேணிட வழி செய்வதொன்றாகும்.

  ஸூர்யனுடைய கதி உத்தராயணமாம் போது, ( கடுங்குளிர் மறைந்து ) வெயில் காலத்தினுடைய தொடக்கம் மெதுவாக ஆரம்பமாகிறது. எனவே அவ்வேளையில் நதிகளில் ஆழ அமிழ்ந்து குளித்திடுகை என்பது உடல் நலத்திற்கும் உகந்ததாம்.

  உத்தர பாரதத்தில் கங்கை-யமுனை நதிகளின் கரைகளில் அமைந்துள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் பண்டிகைகள் ” மேளா ” என்று உத்ஸாஹமாக நடத்தப்பெறுகின்றன.

  வங்காளத்தில் மகர-ஸங்க்ராந்தி தினத்தில் கங்கா ஸாகரத்தில் நடைபெறும் விழாவே நம் நாட்டின் மிகப்பெரிய பண்டிகை என்று சொல்லலாம்.

  கங்கா ஸாகரத்தில் நடைபெறும் இவ்வுத்ஸவத்தின் பின்னே பௌராணிகர்கள் சொல்லும் விஷயம் அறியத் தகுந்ததொன்றே!

  கங்கை ஸ்வர்க்கத்திலிருந்து இறங்கி, பகீரதனைப் பின் தொடர்ந்தபடி கபில முனியின் ஆஶ்ரமத்தினுள் நுழைந்து ஸமுத்திரத்தில் கலந்தாளாம். இது நடந்தது மகர-ஸங்க்ராந்தி அன்று தானாம்.

  ஶாபத்தால் துன்புற்ற (ஸகரனுடைய ) அறுபதினாயிரம் பிள்ளைகள் நற்கதி பெற்றதும் கங்கையின் மஹிமையினால் தானே !

  srirangam vaikunta ekadasi utsav5 - 3

  மேற்சொன்ன இவ்விஷயங்களின் நினைவாகவே கங்கை “கங்கா ஸாகர்” என்கிற ப்ரஸித்தமான பெயரை இவ்விடத்தில் அடைந்தது. எனவே மகர-ஸங்க்ராந்தி இங்கு ( கங்கா ஸாகரத்தில் ) விஶேஷம்.

  மகர-ஸங்க்ராந்தி பர்வத்தில் ( உத்ஸவத்தில் ) ப்ரயாக் ராஜில் தீர்த்த ஸங்கம ஸ்தலத்தில், ப்ரதி வருஷமும்
  இந்த ‘மாக மாதத்தில் மேளா’ ( தை சங்கராந்தி உத்ஸவம் ) நடைபெறுகின்றது.

  பக்த கணங்கள் ‘ கல்ப வாஸம் ‘ என்கிற வ்ரதத்தை ஶ்ரத்தையுடன் இங்கு அனுட்டிக்கின்றார்கள்.

  கங்கையின் கரையில் வஸித்துக் கொண்டு ஒரு மாதம் முழுவதும் கங்கை நீரைப் பருகிக்கொண்டும், ஒரு வேளை மட்டும் உணவு, பஜனைகள், ஸத்ஸங்கங்கள், கீர்த்தனங்கள், ஸூர்ய நமஸ்காரங்கள், அர்க்கிய ப்ரதானம் இவைகளைத் தவறாமல் செய்தும், வேதாத்தியயன த்யானங்களால் தங்களை மெருகேற்றிக் கொண்டும் வார்த்தைகள் மற்றும் செய்கைகளினால் குற்றங்கள் நிகழாதவாறு ஶுத்தர்களாக இருப்பதே கல்பவாஸம் ஆகும்.

  காம க்ரோத லோப மதங்களை ஒழிப்பதே இந்த அனுட்டானத்தின் முக்கிய நோக்கமாகும்.

  ஆறு வருடங்களுக்கொரு முறை அர்த்த கும்பமும், பன்னிரண்டு ஆண்டுகளுக்கொரு முறை மஹா கும்பமும் இங்கே விஶேஷங்கள்.

  மஹாராஷ்ட்ரத்தில் மகர-ஸங்க்ராந்தி அன்று எள் தானம் மற்றும் எள்ளினாலான பணியாரங்கள் விஶேஷம்.

  அதற்கு ஒரு சுவையான காரணம் உண்டு.

  மகர-ஸங்க்ராந்தியிலிருந்து ஸூர்யனுடைய கதி எள்ளளவாக ( கொஞ்சம் கொஞ்சமாக ) வேகமெடுக்கத் தொடங்குமாம் ! அதனால் தான் எள் பணியாரங்கள் !

  மஹாராஷ்ட்ரத்திலும் குஜராத்திலும் வேடிக்கை விளையாட்டுக்களினால் மகர-ஸங்க்ராந்தி சிறப்பு பெறும்.

  பட்டம் விட்டுத் தங்கள் மகிழ்ச்சியினை குஜராத் தேஶத்தவர்கள் வெளிப்படுத்துவர்.

  பஞ்சாபிலும் ஜம்மு காஷ்மீரிலும் மகர-ஸங்க்ராந்தி தினத்தை ‘லோஹிடீ’ என்றழைக்கின்றனர்..

  சுவையான காரணம் இதன் பின்னேயும் உண்டு..

  இது குறித்து அங்கு வழிவழியாகச் சொல்லப்படும் கர்ண பரம்பரைக் கதை ஒன்றுண்டு.

  கண்ணனைக் கொல்லுதற் பொருட்டு கம்ஸன் பற்பல அஸுரர்களை ஏவிய வண்ணம் இருந்தமை நாமறிந்ததே !

  மகர ஸங்க்ராந்தி அன்றைய தினம் ‘லோஹிதா’ என்னும் பெயருடைய அரக்கி தீய புந்திக் கஞ்சன் ( கம்ஸன் ) ஆணைப்படி, கண்ணனை முடிக்க வந்தாள். கண்ணன் வழக்கம் போல் விளையாட்டாகவே அவளை முடித்திட்டான்..

  க்ருஷ்ணனாலே லோஹிதை முடிக்கப்பட்ட தினமாதலால் அத்தினத்தை லோஹிடீ என்கிற பெயரில் அவ்விரு மாநில மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

  ஸிந்தீ ஸமாஜத்தினரும் மகர-ஸங்க்ராந்திக்கு ஒரு நாள் முன்னதாக ‘லால் லோஹீ’ என்கிற உத்ஸவத்தை அநுட்டிக்கின்றனர்.

  தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஸுப்ரஸித்தம். அறுவடை செய்த தானியங்களை இறைவனுக்கும் ஸூர்யனுக்கும் அர்ப்பணிக்கும் உன்னத உத்ஸவம் இது. ஸூர்யனை மக்கள் கொண்டாடி மகிழும் தருணம்.. உழவர்களை ஏத்திடும் பொழுதிதுவாகும்.

  பாரதீய ஜ்யோதிஷ ஶாஸ்த்ரங்களினால், மகர-ஸங்க்ராந்தி தினத்தில் ஒரு ராஶியிலிருந்து மற்றொரு ராஶிக்குள் ஸூர்யன் ப்ரவேஶிப்பது, இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு இடம்பெயர்வதற்கான குறீயீடாகப் பார்க்கப்படுகின்றது.

  அன்றிலிருந்து இரவின் அவதி குறைவாகவும், பகற்பொழுது அதிகமாகவும் இருக்கும். பகற்பொழுது அதிகமெனின் ஒளிக்குக் குறைவில்லை. இருட்டு ( அறிவின்மை ) தேயும் !

  Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )

  அதிகமான ஒளியினால் உயிரினங்களின் ஶக்தி ஒளிர்கின்றன.. அதனால் எடுத்த காரியங்களைச் சாதிக்கும் திறல் பெறுகின்றன.

  ( நற்) கார்யங்களைச் செய்வதற்கான ஶக்தி வ்ருத்³தி⁴யடைவதும் ஸூர்ய நாராயண அநுக்ரஹத்தாலே.. அவன் ஒளியாலே என்பது நம்மவர் நம்பிக்கை.

  எனவே தான் இங்கும் எங்கும் மகர-ஸங்க்ராந்தி விஶேஷமான உத்ஸவமாகக் கொண்டாடப்படுகின்றது.

  • அக்காரக்கனி ஸ்ரீநிதி

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,779FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-