காஞ்சி வரதராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும் விதமாக தேவராஜ மங்களம் என்னும் அருமையான துதியை மணவாள மாமுனிகள் இயற்றியுள்ளார். அனைத்து மங்களங்களையும் தரவல்ல அந்தத் துதி தமிழாக்கத்துடன் இங்கே…!
அப்பிள்ளை அருளிய தனியன்
யச் சக்ரே தேவராஜஸ்ய மங்களாசாஸனம் முதா |
தம் வந்தே ரம்யஜாமாத்ருமுநிம் விசத வாக்வரம் ||
ஸ்ரீ தேவராஜ மங்களாசாஸந ஸ்தோத்ரத்தைத் திருவுள்ளம் உகந்து அருளிச்செய்த விசதவாக்சிகாமணிகள் என்று புகழ்பெற்ற ஸ்வாமி மணவாளமாமுனிகளை வணங்குகிறேன்.
மங்களம் வேதஸோ வேதிமேதினீ க்ருஹமேதினே |
வரதாய தயாதாம்னே தீரோதாராய மங்களம் ||
பிரம்மாவின் வேள்விச்சாலையை இருப்பிடமாய்க் கொண்டவரும், கருணைக்கு இருப்பிடமானவரும், வீரம், வள்ளல் தன்மை உடையவருமான ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
வாஜிமேதே வபாஹோமே தாதுருத்தர வேதித: |
உதிதாய ஹுதாதக்நே: உதாராங்காய மங்களம் ||
பிரம்மாவின் அஸ்வமேத வேள்வியில் ஹோமம் செய்தவுடன், ஹோம அக்னியில் இருந்து உதித்தவரும், அழகான திருமேனியை உடையவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
யஜமானம் விதிம் வீக்ஷ்ய ஸ்மயமான முகச்ரியே |
தயமான த்ருசே தஸ்மை தேவராஜாய மங்களம் ||
தன்னைக் காண விழைந்த பிரம்மாவை நோக்கிக் கருணையோடு புன்முறுவல் செய்தபடி தோன்றிய வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
வாரிதச்யா மவபுஷே விராஜத் பீதவாஸஸே |
வாரணாசல வாஸாய வாரிஜாக்ஷாய மங்களம் ||
கார்மேக வண்ணரும், மஞ்சள் பட்டாடை அணிந்தவரும், அத்திகிரி மலைமேல் திகழ்பவரும், தாமரைக் கண்ணருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
அத்யாபி ஸர்வபூதானாம் அபீஷ்ட பலதாயினே |
ப்ரணதார்த்தி ஹராயாஸ்து ப்ரபவே மம மங்களம் ||
அனைத்து உயிர்களுக்கும் விரும்பிய வரங்களைத் தருபவரும், தன்னைச் சரணடைந்தோரின் துயரங்களைப் போக்குபவரும், நமக்குத் தலைவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
திவ்யா வயவ-ஸௌந்தர்ய-திவ்யாபரண-ஹேதவே |
தந்தாவள கிரீசாய தேவராஜாய மங்களம் ||
அழகிய அங்கங்களும், திவ்விய ஆயுதங்களும் கொண்டவராய் அத்திகிரி மேல் திகழும் வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
புருஷாய புராணாய புண்யகோடி-நிவாஸினே |
புஷ்பிதோதார-கல்பத்ரு கமநீயாய மங்களம் ||
மிகத் தொன்மையானவரும், புண்ணியகோடி விமானத்தில் எழுந்தருளியிருப்பவரும், கற்பக மரம் போன்றவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
காஞ்சனாசல ச்ருங்காக்ர-காலமேகாநு ஸாரிணே |
ஸுபர்ணா ஸாவதம்ஸாய ஸுரராஜாய மங்களம் ||
பொன்மலையின் உச்சியில் கார்மேகம் விளங்குவது போல் கருட சேவையில் காட்சிதரும் வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
போகாபவர்க யோரேகம் வாஞ்சத்ப்யோ தததே த்வயம் |
ஸ்ரீமத் வரதராஜாய மஹோதாராய மங்களம் ||
இம்மை, மறுமை ஆகிய இரண்டுக்குமுரிய வரங்களை அடியார்களுக்கு அள்ளித் தரும் கருணைமிக்க வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
மதங்கஜாத்ரி-துங்காக்ர-ச்ருங்க ச்ருங்கார-வர்ஷ்மணே |
மஹாக்ருபாய மத்ரக்ஷா-தீக்ஷிதாயாஸ்து மங்களம் ||
அத்திகிரி மலை உச்சிக்கு ஆபரணமாய்த் திகழ்பவரும், அடியார்களைக் காப்பதில் உறுதியாய் நிற்பவரும், கருணை மிக்கவருமான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
ஸ்ரீகாஞ்சீபூர்ணமிச்ரேண ப்ரீத்யா ஸர்வாபிபாஷிணே |
அதீதார்ச்சா-வ்யவஸ்த்தாய ஹஸ்த்யத்ரீசாய மங்களம் ||
அர்ச்சாவதார நிலையை மீறித் தன் கருணையால் திருக்கச்சி நம்பிகளிடம் உரையாடிய வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
அஸ்து ஸ்ரீஸ்தனகஸ்தூரீ-வாஸனா-வாஸிதோரஸே |
ஸ்ரீஹஸ்திகிரிநாதாய தேவராஜாய மங்களம் ||
திருமகளின் திருமார்பிலுள்ள சந்தனம், குங்குமத்தின் நறுமணம் கமழும் திருமார்பை உடையவரான வரதராஜப் பெருமாளுக்கு மங்களம்.
மங்களாசாஸனபரை : மதாசார்யபுரோகமை:
ஸர்வைச்ச பூர்வை : ஆசார்யை : ஸத்க்ருதாயாஸ்து மங்களம்.
இறைவனுக்குப் பல்லாண்டு பாடுவதையே தொழிலாகக் கொண்ட நமது குருமார்களால் போற்றப்பட்ட பெருமாளுக்கு மங்களம்!