விநயத்தின் தேவை: ஆச்சார்யாள் அருளமுதம்!

Published:

abinav vidhya theerthar

ஒரு இளைஞன் ஒரு மகரிஷியை அணுகி தயை கூர்ந்து எனக்கு பரம்பொருளைப் பற்றி உபதேசிக்க வேண்டும் என்று மிகவும் பணிவுடன் கேட்டுக் கொண்டான்.

அதற்கு குரு நீ முதலில் ஆறுமாதங்கள் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வா என்று கூறினார் குரு. குரு கூறியவாறே குரு சேவை புரிதல் போன்ற பிரம்மச்சர்ய விதிமுறைகளை சிஷ்யன் நன்கு கடைப்பிடித்து வந்தான்.

குறிப்பிட்ட காலம் முடிவடைந்ததும் உபதேசத்திற்காக குருவிடம் செல்ல ஆயத்தமானான். முதலில் அவன் நதியில் குளித்து தன்னை தூய்மைப் படுத்திக் கொண்டான். நதியிலிருந்து அவன் கிளம்பும் தருவாயில் அங்கே வந்த ஒருவன் தன் கையில் இருந்த குப்பை கூடையை எடுத்து குப்பையோடு அவன்மேல் கவிழ்த்தினான்.

கடும்கோபம் கொண்ட சிஷ்யன் அந்த மனிதனை பளாரென்று ஓங்கி அறைந்தான் பிறகு மீண்டும் நதியில் மூழ்கி குளித்து விட்டு குருவை நாடிச் சென்றான் குரு அவனிடம் நீ இன்று என்ன செய்தாய் என்பதைச் சொல் என்று கேட்டார்.

சிஷ்யன் கூறினான் நான் குளித்துவிட்டு வருவதற்கு முன் வரையில் எல்லாம் சரியாகவே நடந்துகொண்டிருந்தன‌ நதியை விட்டு நான் கிளம்பும்போது ஓர் அயோக்கியன் என் மேல் குப்பையை கொட்டினான் என்ன தைரியம் இருந்தால் அவன் என்னிடம் அப்படி நடந்து கொள்வான். எனவே அவனை நான் அடித்தேன் மறுபடி நதிக்குச் சென்று பிறகு தங்களிடம் உபதேசத்தை பிறகு பெறுவதற்காக இங்கு வந்திருக்கிறேன் என்று கூறினான்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

இதைக்கேட்ட குரு உபதேசம் செய்வதற்கான தகுந்த காலம் உனக்கு இன்னும் ஏற்படவில்லை. மூன்று மாதங்களுக்கு பிரம்மச்சாரிய விரதத்தை அனுஷ்டித்து கொண்டு வா என்று சொன்னார்.

குரு கூறியவாறே சிஷ்யன் நடந்து கொண்டான். மீண்டும் உபதேசத்திற்காக குறிப்பிட்ட நாளன்று அவன் நதியில் நீராடி முடித்து வெளியே வந்தான். இதற்கு முன்பு அவன் தலையில் குப்பை கொட்டிய அதே மனிதன் மீண்டும் அங்கே வந்து அவன் மீது குப்பை கொட்டினான். இம்முறை சிஷ்யன் முதல் தடவை போல் அத்துணை கோபம் படாவிட்டாலும் அம்மனிதனை வசைச் சொற்களால் ஏசினான். பிறகு நதியில் மறுபடியும் நீராடி விட்டு குருவிடம் சென்றான். அன்று நடந்த நிகழ்ச்சிகளை விவரிக்குமாறு குரு கட்டளை இட்டார். சிஷ்யன் நடந்ததைக் கூறினான். அதைக் கேட்ட குரு காலம் இன்னும் கனியவில்லை இன்னும் மூன்று மாதங்கள் பிரம்மச்சரியத்துடன் இரு என்று கூறினார்.

சிஷ்யன் குரு சொல்படி நடந்தான் மூன்று மாதங்கள் முடிவடைந்த பின் தன் குருவிடம் சென்று உபதேசத்தை பெறுவதற்கு முன் குளிக்க சென்றான் அவன் குளித்து முடிந்ததும் இதற்கு முன் இரண்டு தடவைகள் அவனை எரிச்சலூட்டியவன் மீண்டும் அங்கு தோன்றி இம்முறை அவன் மேல் குப்பையைக் கொட்டி அவனை அசுத்தமாக்கினான். இந்த தடவை சிஷ்யனுக்கு அவன் மேல் கோபம் வரவில்லை‌.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.03 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

தன் இரு கைகளையும் குவித்து அவனுக்கு தன் வணக்கத்தை தெரிவித்து விட்டு நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன் என்னுள் புதைந்து கிடந்த என்னுடைய முரட்டுத்தனத்தையும் கோபத்தையும் நீக்குவதற்கு தாங்கள் எனக்கு மிகவும் உதவி புரிந்து இருக்கிறீர்கள் என்றான். பிறகு நதியில் மறுபடியும் குளித்து தூய்மையாக்கிக் கொண்டு குருவிடம் சென்றான். இம்முறை குரு அவனை பார்த்து உபதேசத்தை பெறுவதற்கு நீ இப்பொழுது தகுதியுடன் இருக்கிறாய் என்று கூறி தத்துவத்தை அவனுக்கு உபதேசம் செய்தார்.

சிஷ்யனுடைய கர்வத்தை அகற்றி விநயத்தை அவனுக்கு கற்பிப்பதற்காக எல்லா தருணங்களிலும் அவன் மேல் குப்பை கொட்டுவதற்கு குரு ஏற்பாடு செய்திருந்தார். தற்பெருமையும் கோபமுடைய ஒருவனால் குரு கற்றுக்கொடுத்த ஆத்ம தத்துவத்தை உணர முடியாது.

Related articles

Recent articles

spot_img