December 8, 2024, 12:34 PM
30.3 C
Chennai

காமாட்சி அம்மனும்,நவாவரண பூஜையும் தரும் நன்மைகள்

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.

ALSO READ:  வாடிப்பட்டி, உசிலை, சோழவந்தான் கோயில்களில் கும்பாபிஷேக விழாக்கள் கோலாகலம்!

இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

ALSO READ:  ராஷ்டிரீய ஹிந்து மகா சபா நடத்திய மஹா சண்டி யாகம்!

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week