IND Vs SL T20: இந்தியா திரில் வெற்றி

Published:

india vs srilanka

இந்தியா இலங்கை முதல் டி20 ஆட்டம் – மும்பை – 03.01.2023
இந்தியா திரில் வெற்றி

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி (162/5, தீபக் ஹூடா 41, இஷான் கிஷன் 37, அக்சர் படேல் 31, ஹார்திக் பாண்ட்யா 29) இலங்கை அணியை (20 ஓவரில் 160 ஆல் அவுட், தசுன் ஷனகா 45, குசல் மெண்டிஸ் 28, கருணரத்னே 23, வனிந்து ஹசரங்கா 21, ஷிவம் மாவி 4/22, உம்ரான் மலிக் 2/27, ஹர்ஷல் படேல் 2/41) இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி, இந்தியா வந்துள்ள இலங்கை அணி உடன் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இன்று மும்பையில் மோதியது. இந்த போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் சுப்மன் கில் மற்றும் சிவம் மாவி இருவரும் அறிமுகமானார்கள்.

தொடக்க வீரர்களாக கில் மற்றும் இஷான் கிஷன் இருவரும் களமிறங்கினார்கள். கில் மற்றும் சூரியகுமார் யாதவ் இருவரும் தலா 7 ரன்களில் ஆட்டமிழந்தனர். இதற்கு அடுத்து வந்த சஞ்சு சாம்சனும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் கேப்டன் ஹர்திக் பாண்டியா இஷான் கிஷனுடன் இணைந்து ஆடி 29 ரன்கள் சேர்த்தார். இச்சமயத்தில் இஷான் கிஷன் 37 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

ALSO READ:  FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணிக்கு தீபக் ஹூடா மற்றும் அக்சர் பட்டேல் இருவரும் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை 20 ஓவர்கள் முடிவில் 162 ரன்கள் எட்ட வைத்தார்கள். தீபக் 41 ரன்களும் அக்சர் 31 ரன்களும் எடுத்தார்கள்.

இதற்கு அடுத்து களம் இறங்கிய இலங்கை அணிக்கு, இன்று அறிமுக போட்டியில் களம் கண்ட இந்திய வேகப்பந்துவீச்சாளர் சிவம் மாவி மிகப்பெரிய சிம்ம சொப்பனமாக விளங்கினார். துவக்க ஆட்டக்காரர் நிசாங்க, அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா மற்றும் ஹசரங்க ஆகியோரது விக்கட்டுகளை மாவி கைப்பற்றினார்.

ஒருபுறம் இலங்கை அணி இக்கட்டுகளை சீராக இழந்தாலும் இன்னொரு புறம் அந்த அணியின் கேப்டன் தசுன் ஷனகா நிலைத்து நின்று விளையாடி இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலை தந்தார். 15 ஓவர்கள் முடிவில் 110 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இலங்கை இழந்திருந்தது.

ஆயினும் உம்ரன் மாலிக் வீசிய பந்தில் மிகச் சிறப்பாக ஆடி வந்த இலங்கை கேப்டன் ஷனகா 45 ரன்களில் வீழ்ந்தார். இதற்கு அடுத்து மீண்டும் பந்து வீச வந்த சிவம் மாவி பதினெட்டாவது ஓவரில் மூன்றே ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கட்டையும் வீழ்த்தி அறிமுக போட்டியில் நான்கு விக்கெட்டுகளை பெற்றார்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

இதற்கு அடுத்த இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 29 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை வீசிய ஹர்ஷல் பட்டேல் பதினாறு ரண்களை விட்டுத்தந்து ஆட்டத்தில் நெருக்கடியை ஏற்படுத்தி விட்டார். இறுதி ஓவரில் இலங்கை அணிக்கு 13 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான மும்பை வான்கடே மைதானத்தில் வேகப் பந்துவீச்சாளர் ஒருவர் பந்தை வீசுவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்தை சுழற் பந்துவீச்சாளர் அக்சர் படேல் கையில் கொடுத்தார்.

அக்சர் படேல் முதல் பந்தை வைடாக வீசினார். அடுத்த பந்தில் ஒரு ரன் தந்து, அடுத்த பந்தை ரன் இல்லாமல் செய்தார். மூன்றாவது பந்து சிக்சருக்குப் போனது. நான்காவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. அடுத்த இரண்டு பந்துகளிலும் இலங்கை வீரர்கள் ரன் அவுட் ஆக, பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அறிமுக போட்டியில் விளையாடிய சிவம் மாவி நான்கு ஓவர்கள் பந்து வீசி 22 ரன்கள் விட்டுத் தந்து நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். உம்ரன் மாலிக் நான்கு ஓவர்கள் பந்து வீசி 27 ரன்கள் விட்டு தந்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் ஹூடா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது முதல் போட்டியை வென்று இந்திய அணி முன்னிலை வகிக்கிறது!

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Related articles

Recent articles

spot_img