போர்வெல் குழிக்குள் விழுந்த 3 வயது குழந்தை! பக்கத்தில் பள்ளம் தோண்டி பத்திரமாக மீட்பு!

தமிழகம் பொது தகவல்கள்
bore well 1 - 2026

புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் அரியூரைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் கடந்த 13-ம் தேதி கண்டமங்கலத்தை அடுத்திருக்கும் சின்னபாபு சமுத்திரத்திலுள்ள உறவினர் மண்ணாங்கட்டியின் வீட்டுக்கு தன் 3 வயது குழந்தை கோபினியுடன் சென்றிருக்கிறார்.

அன்றைய தினம் அந்த ஊரைச் சேர்ந்த பயனாளர்களுக்கு பசுமை வீடுகள் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்காக போர்வெல் மூலம் குழி தோண்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

கான்கிரீட் கம்பிகள் மற்றும் சிமென்ட் மூலம் தூண் அமைப்பதற்காக மண்ணாங்கட்டிக்குச் சொந்தமான இடத்திலும் 1 அடி சுற்றளவு மற்றும் 7 அடி ஆழத்தில் அஸ்திவாரக் குழி தோண்டப்பட்டது.

borewell 3 - 2026

அங்கு குழி தோண்டி முடித்த பணியாளர்கள் வேறு இடத்துக்குச் சென்றுவிட்டனர். அப்போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை கோபினி அந்தக் குழிக்குள் தவறி விழுந்தாள்.

சிறிதுநேரத்தில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த பாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள் குழந்தை குழிக்குள் விழுந்தது கண்டு அழுது கூச்சலிட்டனர்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

அதைக் கேட்டு அங்கு கூடிய ஊர் மக்களும் இளைஞர்களும் குழிக்குள் கையைவிட்டு குழந்தையைத் தூக்க முயற்சி செய்தனர். ஆனால், குழந்தையின் இரு கைகளும் குழிக்குள் சிக்கிக்கொண்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.

borewell - 2026

உடனே அந்தப் பகுதியில் இருந்த ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன், குழந்தை விழுந்த குழிக்கு அருகிலேயே பள்ளம் ஒன்றைத் தோண்டினர். இதையடுத்து, அங்கிருந்து குறுக்கு வாட்டில் மண்ணைத் தோண்டி குழந்தையைப் பாதுகாப்பாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

15 நிமிடங்களில் முடிந்த இந்த மீட்புப் பணி குறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1 நிமிடம் 11 விநாடிகள் ஓடும் அந்த மீட்புப் பணி வீடியோ காட்சிகள் பார்ப்பவர்களைப் பதற வைக்கின்றன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.